இந்தியா பதிலடி pt web
இந்தியா

OPERATION SINDOOR :விடிய விடிய பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா; என்ன நடக்கிறது?

பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின், அங்கேஷ்வர்

இந்தியா தாக்குதல்: லாகூரில் கடும் சேதம் என தகவல்!

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள சம்பாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழந்தாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சண்டிகரில் எச்சரிக்கை ஒலி!

நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலையும் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாநிலங்களில் நேற்று இரவு மின் தடை ஏற்படுத்தப்பட்டது. ஜம்முவில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, எல்லையோர மாநிலங்களில் இன்று உச்ச கட்ட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் பால்கனியில் நிற்க கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமான வீடுகள்

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வீடுகள் , வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஜம்மு, பூஞ்ச், பதன்கோட், உதம்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் சேதம்.

பாகிஸ்தானின் PSL ஆட்டங்கள் யுஏஇக்கு மாற்றம்

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் PSL தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் ஒரு வாரம்தான் தாங்கும் - கர்னல் பிரின்ஸ்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்!

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், “ சிந்தூர் நடவடிக்கை : பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 08 மற்றும் 09, 2025 இரவில் மேற்கு எல்லை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிமுறையை மீறி (CFV) ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டது. ஆனால், அவற்றின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் CFV களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. #இந்திய இராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. மேலும், பாகிஸ்தானின் அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்தால் பதிலளிக்கப்படும்.” என்று பதிவிட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் பஞ்சாப்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மறு அறிவிப்பு வரும்வரை அமிர்தசரஸ் விமான நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

50 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

இந்தவகையில், சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்திய பாதுகாப்பு படை. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், பதன்கோட் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அழிப்பு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாக். ட்ரோன் தாக்குதல் தோல்வி; உமர் அப்துல்லா!

”ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்துள்ளது. நான் நிலைமையை ஆராய ஜம்முவிற்கு விரைந்துள்ளேன் '' என்று உமர் அப்துல்லா சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை ரத்து; பணிக்கு திரும்ப உத்தரவு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் இருந்தன. பொதுமக்கள் வாழும் பகுதியை இலக்கிட்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், எல்லை மாநிலங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தவகையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எல்லையோர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்ப முதல்வர் பஜன்லால் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை (மே 8) இரவிலிருந்து தாக்குதல் நடத்தியது.

முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்!

அமைச்சர் ராஜ்நாத் சிங்

போர் விதியை மீறி பாகிஸ்தான் ஒரு சில இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு விடியவிடிய பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். மேலும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி மற்றும் லாகூரை குறி வைத்தது. எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவரும் நிலையில், முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்திவருகிறார். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முழு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பலுச் விடுதலைப் படையின் கடும் தாக்குதல்

பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பாக் ராணுவத்தினரைக் குறிவைத்து, பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தியது. சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதலில் இறங்கியதாக தகவல் வெளியானது. கிழக்கே இந்தியாவின் தாக்குதலையும், தென் மேற்கே பலுசிஸ்தான் விடுதலைப் படையினரின் தாக்குதலையும் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் எதிர்கொண்டது.

எல்லையில் பாகிஸ்தானின் மிகப் பெரிய ஊடுருவலை எல்லைப் பாதுகாப்பு படை முறியடித்தது. ஜம்மு- காஷ்மீரின் சம்பா அருகே, கடும் தாக்குதலின் தொடர்ச்சியாக எல்லை ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை முறியடித்தது.

பாகிஸ்தான் - இந்தியப் படைகள் இடையே காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடும் தாக்குதல் நீடித்தது. பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டன. பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மின்தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் பேசி வருவதாகவும், இருநாடுகளும் மோதலை உடனே நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.அதுமட்டுமின்றி, இருதரப்பும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிப்பதாகவும் கூறினார்.

பாகிஸ்தானில் பெரும்பாலும் ஊரடங்கு

பாகிஸ்தானின் நகரங்கள் அடுத்தடுத்து தாக்குதல்களை எதிர்கொண்டன. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, குவெட்டா என்று பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் பலவும் இந்திய படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின.

கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை தாக்குதல் மேற்கொண்டது. இஸ்லாமாபாத், லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானின் முக்கிய வணிக நகரமான கராச்சியின் மீது 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியாவின் தீவிர பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தானின் பெரும்பான்மை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் கடும் பதிலடியால், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இஸ்லாமாபாத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தியாவின் தீவிரத் தாக்குதலால் பாகிஸ்தான் கடும் பதற்றத்திற்கு உள்ளானது. இரவு முழுவதும் எல்லையோரத்தில் தற்காப்புத் தாக்குதலிலும், பாகிஸ்தான் நகரங்கள் மீது தீவிர தாக்குதலிலும் இந்தியப் படைகள் இறங்கின.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் பதுங்கு குழிகளில் அடைக்கலம்

உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரை பாகிஸ்தான் இலக்கிட்ட நிலையில், அந்நகரம் பதற்றத்தில் ஆழ்ந்தது. அமிர்தசரஸில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உஷார் படுத்தப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டிகர், ஸ்ரீநகர், குல்லு, லூதியானா என முக்கிய நகரங்களின் விமான நிலையங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டன. மொத்தம் 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் பதுங்கு குழிகளில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் ஷெல் தாக்குதலின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் எல்லையோர மக்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைக்கலம் புகுந்து, தங்களை தற்காத்துக் கொண்டனர்.

இந்தியப் படைகள் கடும் பதிலடி

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியப் படைகள் கடும் பதிலடி கொடுத்தன. பாகிஸ்தானின் சியால்கோட் மீதும் இந்தியப் படைகள் வான்வளித் தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தான் உடனான மோதலின்போது அந்நாட்டு விமானங்கள் இந்தியப் படைகளால் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இந்திய நிலைகளைக் குறிவைத்து வந்த பாகிஸ்தானின் மூன்று விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய படைகள் கடும் தாக்குதலில் இறங்கின. இதனால் இரு நாட்டு மக்களுக்கும் நேற்றைய இரவு உறங்கா இரவாக மாறியது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தைக் குறிவைத்து இந்தியப் படைகள் தாக்குதலில் இறங்கியது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி என்று பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து இந்திய படைகள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

பாகிஸ்தானின் தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக வடஇந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. குறிப்பாக எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

விடிய விடிய தொடரும் தாக்குதல் - அடங்காத சத்தம்

”none of America's business” - போர் குறித்து அமெரிக்க துணை அதிபர் பதில்

ட்ரம்பின் நிர்வாகம் போரில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புடன் பேசி பதற்றத்தைக் குறைக்க அழைப்பு விடுத்து சில மணி நேரங்களுக்குப் பின் வான்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “அடிப்படையில் எங்களுக்குச் சம்பந்தமில்லாத மற்றும் அமெரிக்காவின் கட்டுப்படுத்தும் திறனுடன் எந்த தொடர்புமில்லாத ஒரு போரின் நடுவில் நாங்கள் தலையிடப்போவதில்லை. ஆயுதங்களை கீழே போடச் சொல்லி இந்தியர்களுக்கு அமெரிக்காவால் சொல்ல முடியாது. பாகிஸ்தானியர்களையும் சொல்ல முடியாது. எனவே, இந்த விவகாரத்தை ராஜதந்திர வழிகள் மூலமே தொடரப்போகிறோம். இது பிராந்தியப் போராகவோ அல்லது அணு ஆயுதப்போராகவோ மாறிவிடப்போவதில்லை என்பதுதான் எங்களது நம்பிக்கை. இப்போதைக்கு அது நடக்காது என்றே நினைக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பரப்பப்படும் போலி வீடியோக்கள்

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நாட்டையே பரபரப்பாக வைத்துள்ள நிலையில், தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எனக் குறிப்பிடப்பட்டு போலி வீடியோக்கள் அதிகம் பரவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு பரப்பப்படும் வீடியோ 2020 ஆம் ஆண்டு லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுக வெடிப்பில் நிகழ்ந்த நிகழ்வு என்று BBC Verify உறுதிப்படுத்தியுள்ளது. மற்றொரு வீடியோவில் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் தாக்குதல்கள் என பரப்பப்படுகிறது. ஆனால், அதுவோ 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி காசா பகுதியில் நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்திலும் விடுமுறைகள் ரத்து

போர் பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மேற்கு வங்க அரசு மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறைகளையும் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு பொது நலனுக்காக பிறப்பிக்கப்படுகிறது என்றும் அடுத்த உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியிலும் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிடிபட்ட பாகிஸ்தான் விமானி

பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் விமானத்திலிருந்து வெளியேறிய விமானி ராஜஸ்தான் ஜெய்சால்மர் எல்லை அருகே உயிருடன் பிடிபட்டுள்ளார்.

விமான நிலையங்கள் மூடல்

இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, பயணிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றையும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடல்

ஜம்மு காஷ்மீரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலும் இரு நாட்களுக்கு பள்ளிகள் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வரவேண்டும்...

இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, பயணிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றையும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பள்ளி கல்லூரிகள் மூடல்

பஞ்சாபில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மாறி வரும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து வீழ்த்தப்படும் பாகிஸ்தான் விமானங்கள்

இந்திய நிலைகளைக் குறிவைத்து வந்த பாகிஸ்தானின் 3 விமானங்களை இந்தியப் படைகள் சுட்டு வீழ்த்தின. பாகிஸ்தானின் எஃப்16, ஜேஎஃப்17 ஆகிய போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

பதிலடியில் இறங்கிய இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை முறியடித்தது இந்திய ராணுவம்.. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்பட்டது. ஜம்மு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை; தாக்குதலை முறியடிக்க மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.