நாடெங்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வழிவகுக்கும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விரிவான விவாதத்திற்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இம்மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். அரசின் நடவடிக்கை சட்ட விரோதமானது என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.
மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பில் 263 வாக்குகள் ஆதரவாகவும் 198 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மட்டும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது.
இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.