கேரள மக்களின் மத, சமூக நல்லிணக்க விழாவான ஓணம், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படும் சூழலில், அதன் சிறப்புகளைப் பார்க்கலாம்.
மதப் பண்டிகையாக அல்லாமல், ஒட்டுமொத்த கேரள மக்களும் கூடிக் கொண்டாடும் விழாவாக இருக்கிறது ஓணம். கேரள மக்களின் மத, சமூக நல்லிணக்க இந்த விழா தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படும் சூழலில், இந்த விழாவின் சிறப்புகளைப் பார்க்கலாம். சாதி, மதம், வர்க்கம் போன்ற எந்த பேதங்களும் இல்லாமல், அனைவரையும் ஒன்றிணைக்கும் திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. இடைக்காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளில் உழன்ற கேரளாவுக்கு, அந்த மண்ணில் மனிதர்கள் அனைவரும் சமமாக வாழ்ந்த ஒரு பொற்காலத்தை நினைவுபடுத்தும் திருவிழா ஓணம் பண்டிகை.
மாவலி மன்னன் ஆண்டுதோறும் மக்களைக் காணவரும் நாள்தான் ஓணம் என்பது தொன்றுதொட்டும் நிலவிவரும் நம்பிக்கை. மாவலியின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சமத்துவத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்ததாகவும், இன்றும், அந்த சமத்துவ சமுதாயத்தின் மீதான ஏக்கம் மலையாளிகளின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதாகவும் கேரளர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
நாராயண குரு போன்ற போற்றுதலுக்குரிய சமூகச் சீர்திருத்தவாதிகள் தொடங்கி இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற ஆட்சியாளர்கள் வரை பலர் தங்களது அயராத உழைப்பாலும் களப்பணியாலும் கேரளாவில் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குமான ஆழமான விதைகளை ஊன்றியுள்ளனர். காலப்போக்கில், ஓணம் மதம் கடந்த ஒரு சமூக விழாவாக மாறியது. இஸ்லாம், கிறிஸ்தவ மக்களும் கணிசமாக வாழும் கேரளாவில் சமூக நல்லிணக்கமும் மதச்சார்பற்ற தன்மையும் அடிப்படை விழுமியங்களாக ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. சமீபகாலமாக பரப்பப்படும் பிரிவினை கருத்துகளுக்கான பிரசாரங்களுக்கு எதிரான ஒரு வலுவான பதிலாக ஓணம் திகழ்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள்.
ஓணம் வீட்டிற்குள் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள் என்று எல்லா இடங்களிலும் ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா உள்ளுர் மக்களுடன் வெளியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளையும் இணைக்கிறது. சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வு என்பதே ஓணத்தின் முக்கியச்செய்தி! தெலுங்கு, கன்னடம், துளு போன்றவையும் நம் சகோதர மொழிகள்தான் என்றாலும், மலையாளத்தை மட்டும் தமிழுடன் ஒட்டிப்பிறந்து தனித்து வளர்ந்த சகோதரி என்று சொல்லலாம். ஆகவே, இப்போது ஓணம் தமிழர்களாலும் விரும்பிக் கொண்டாடப்படும் விழாவாகியிருக்கிறது.