செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த 5 மாடிக் கட்டடம், நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிய நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்பதைக் கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தின் அனுமதியற்ற கட்டுமானம் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. மாநகராட்சி தகவலின்படி, சுமார் 495 சதுர அடி பரப்பளவில் அமைந்திருந்த இந்த இடத்தில் தரைத்தளம் மற்றும் ஒரு மாடி மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இடிந்து விழுந்த கட்டடத்தின் தரைத்தளத்துக்கு மேல் 4 மாடிகளும், கீழ்தளத்தில் Basement-ம் இருந்தன.
கட்டடம் 1990களின் இறுதியில் கட்டப்பட்டதாகவும், பின்னர் மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதலாக 2 மாடிகள் கட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கூடுதல் மாடிகள் கட்டப்பட்டபோது கட்டடத்தின் தாங்கும் திறன் மற்றும் அடித்தளத்தின் வலிமை முறையாக பரிசோதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விபத்து நடந்தபோது Basement-ல் கட்டுமானம் அல்லது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு தண்ணீர் தேங்கியிருந்ததாகவும், கட்டடத்தில் ஈரப்பதம் மற்றும் விரிசல்கள் இருந்ததாகவும் உள்ளூர்மக்கள் கூறுகின்றனர். ஆனால் தண்ணீர் தேங்கியதே கட்டடம் இடிந்ததற்குக் காரணம் என்று அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை.
அவசர காலத்தில் வெளியேறுவதற்கான மாற்று வழியும் கட்டடத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தங்கும் வகையில் அறைகள் பிரிக்கப்பட்டிருந்ததும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒவ்வொரு அறையிலும் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் தங்கியிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கட்டடத்தின் உண்மையான பயன்பாடு மற்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
அருகில் இருந்த மற்றொரு பழுதடைந்த கட்டடமும் உடனடியாக காலி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கட்டட உரிமையாளர், கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். இந்தச் சம்பவம், மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பழைய கட்டடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.