புவனேஸ்வர் சம்பவம் எக்ஸ் தளம்
இந்தியா

ஒடிசா | அரசு அதிகாரியை தரதரவென வெளியே இழுத்து வந்து அடி உதை.. பாஜகவினர் அட்டகாசம்.. #Viral Video

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) கூடுதல் ஆணையராக இருப்பவர், ரத்னாகர் சாஹூ. இந்த நிலையில், விசாரணை தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, அவரது அறைக்குள் சென்று அவரது காலரைப் பிடித்து அடித்து தாக்கியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், ஜீவன் ரௌத், ரஷ்மி மகாபத்ரா மற்றும் தேபாஷிஸ் பிரதான் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக புவனேஸ்வர் டி.சி.பி ஜக்மோகன் மீனா தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட தகவல்களின்படி, பாஜக தலைவர் ஜக்நாத் பிரதானுடன் ரத்னாகர் தவறாக நடந்தகொண்டதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ரத்னாகர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “சுமார் ஐந்து அல்லது ஆறு அடையாளம் தெரியாத இளைஞர்கள் என் அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். அவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்களுடன் ஒரு மாநகராட்சி உறுப்பினரும் இருந்தார். அவர், ’பாஜக தலைவர் ஜெகநாத் பிரதானிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டீர்களா’ என்று என்னிடம் கேட்டார். இந்த சிறிய உரையாடலின்போது, அங்கிருந்த குழு என்னை அலுவலகத்திலிருந்து இழுத்துச் சென்று என்னைத் தாக்கியது. மேலும், அந்தக் குழு என்னை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்த முயற்சித்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் நகராட்சி ஊழியர்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளின் மத்தியிலும் போராட்டத்தையும் கண்டனத்தையும் தூண்டியது. மேலும், தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒடிசா நிர்வாகச் சேவை சங்கம் (OAS) இன்றுமுதல் பெருமளவிலான விடுப்பை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளான பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பிஜு ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக், தற்போதைய பாஜக அரசைக் கடுமையாகக் கடுமையாகச் சாடினார். அதுபோல் காங்கிரஸ் கட்சியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்தது. இது பாஜகவின் காட்டு ராஜ்ஜியம் எனத் தெரிவித்துள்ளது.