ஒடிசா  முகநூல்
இந்தியா

ஒடிசா | 10 கிலோ அரிசியை தர மறுத்த தாய்.. மகன் செய்த கொடூர செயல்!

தாய் ராய்பரி சிங் அரிசியை தர மறுத்துள்ளார்.. இதனால், கோபமடைந்த ரோஹித்தாஸ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்ற இறுதியில் வன்முறையாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஒடிசா மாநிலம் சரத்சந்திரபூரில் வசித்து வருகிறார் ரோஹிதாஸ் சிங். சமீபகாலமாகவே இவருக்கும் இவரது சகோதரர் லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில்தான், ரோஹித்தாஸ் சிங் தனது தாயிடம் 10 கிலோ அரிசி வேண்டுமென கேட்டுள்ளார்.

ஆனால், அவரது தாய் ராய்பரி சிங் அரிசியை தர மறுத்துள்ளார்.. இதனால், கோபமடைந்த ரோஹித்தாஸ் தாயிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்ற இறுதியில் வன்முறையாக மாறியுள்ளது. இந்தநிலையில், ஆத்திரமடைந்த ரோஹித்தாஸ் தனது தாயை கோடாரியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால், பலத்த காயமடைந்த தாய் ராய்பரி சிங், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட ரோஹிதாஸ் சிங், தாயை கொன்ற அதே ஆயுதத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், தக்க சமயத்தில் அவ்விடம் வந்த சிலர் அவரை மீட்டு பிஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய லஷ்மிகாந்த் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தநிலையில், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மூத்த காவல்துறை அதிகாரி, “ குற்றம் சாட்டப்பட்டவர் தனது தாயிடம் 10 கிலோக அரிசி கேட்டார். அவர் மறுத்ததால், அவரை கோடரியால் தாக்கியுள்ளார். பின்னர் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்த முயன்றார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதாவின் படி (பிஎன்எஸ்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணைகள் நடந்து வருகின்றன," என்று தெரிவித்தார்.

நொடிப்பொழுதில் ஏற்படும் கோபம், அதனால் ஏற்படும் விளைவிற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய உதாரணம். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.