Varthika Singh & Jensen Huang Varthika Singh's X
இந்தியா

Nvidia CEO ஜென்சென் ஹுவாங் - மனிதநேயத்தின் உதாரணம்... இந்தியப் பெண் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்: தொழில்நுட்பத்திற்கும் மனிதநேயத்திற்கும் முன்னோடி

PT WEB

வர்திகா சிங், ஜென்சன் ஹுவாங் தனது திறமைகள் மீது நம்பிக்கை வைத்து வழிகாட்டியதுடன், புதிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் அவரது மனிதநேயத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர் - M.மீரா

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், தனது குடும்பத்துக்கு இக்கட்டான நேரத்தில் செய்த உதவிகளை இந்தியப் பெண் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

என்விடியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்தியரான வர்திகா சிங், ஜென்சன் ஹுவாங்குடன் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அவரைப் பற்றிய தனது அனுபவங்களை சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Jensen Huang

அதில், தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் மற்றும் மனிதர்களின் திறமைகளை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் ஹுவாங்கிடம் இருப்பதாகப் பாராட்டியுள்ளார். மற்றவர்கள் நம்பிக்கை வைக்கத் தயங்கும் புதிய நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோது ஹுவாங் தனக்கு வழிகாட்டியதாகவும், தனது திறமைகள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஹுவாங்கின் மனிதநேயத்தைத் தான் என்றும் மறக்க முடியாது என வர்திகா தெரிவித்துள்ளார்.

தனது சகோதரி மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கலிபோர்னியாவுக்கு வந்தபோது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகக் கூறியுள்ளார். அந்தச் சூழலில் மருத்துவச் செலவுகள் அதிகரித்ததுடன், பல கடினமான மருத்துவ முடிவுகளையும் குடும்பம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அப்போது ஜென்சன் ஹுவாங் மருத்துவச் செலவுகளுக்கு உதவியதுடன், தனது சகோதரியை நேரில் சந்திக்கவும் நேரம் ஒதுக்கியதாக வர்திகா தெரிவித்துள்ளார். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிடு என்று ஹுவாங் கூறியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

என்விடியா நிறுவனத்தை மட்டுமின்றி, பலரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஹுவாங் என்றும், அவரிடம் பணியாற்றியதற்கும் அவரது அன்பைப் பெற்றதற்கும் நன்றியுடன் இருப்பதாகவும் வர்திகா தெரிவித்துள்ளார்.