வட இந்திய மாநிலங்களில் போராட்டங்களை தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில், உத்தர பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், உத்ராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், பயிற்சி மருத்துவர்கள் உதவித்தொகையை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் அரசு, சுமார் 12 ஆயிரம் ரூபாயாக இருந்த அவர்களுக்கான உதவித்தொகையை 30 ஆயிரமாக உயர்த்த ஒப்புக்கொண்டது. மத்திய பிரதேச அரசு, உதவித்தொகையை சுமார் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 21 ஆயிரத்து 500 ரூபாயாகவும், உத்தர பிரதேச அரசு 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளன. இதனிடையே பயிற்சி மருத்துவர்கள், தாங்கள் 36 மணி நேரம் வரை தொடர்ந்து பணியாற்றவேண்டிய சூழல் இருப்பதாகவும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.