என்னடா இது அப்பளத்துக்கு வந்த சோதனை? FSSAI வைத்த check.. 'இதுதான்' அந்தக் காரணம்!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
கேரள உணவு என்றாலே நினைவுக்கு வருவது பஞ்சுபோல உப்பிய, மொறுமொறுப்பான அப்பளமும் ஒன்று. சாம்பார் சாதம் முதல் கல்யாண விருந்து வரை பல உணவுகளுடன் அப்பளம் முக்கியமானதாக இடம்பெறுகிறது. இந்நிலையில், அப்பளத்தின் தன்மையையே மாற்றக்கூடிய புதிய உணவுப் பாதுகாப்பு விதி கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, அனைத்து வகையான அப்பளங்களிலும் ஈரப்பதம் 15 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என விதிமுறை வகுத்துள்ளது.
ஆனால், கேரள அப்பள உற்பத்தியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள அப்பளத்தின் தனித்துவமான சுவை, தோற்றம் மற்றும் நன்றாக உப்பும் தன்மைக்கு அதன் அதிக ஈரப்பதமே முக்கியக் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
கேரள அப்பளத்தில் தற்போது சராசரியாக 15 முதல் 16 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளது. இதுவே அப்பளத்தை எண்ணெயில் போடும்போது உடனடியாக உப்பச் செய்கிறது. எண்ணெயில் போடும்போது அப்பளத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி, குமிழ்கள் உருவாகின்றன. இதனால் அப்பளத்தின் மேற்பரப்பு சிறிய சிறிய காற்றுக் குமிழ்களோடு, மொறுமொறுப்பாகவும் மாறுகிறது. ஈரப்பதம் குறைக்கப்பட்டால், அப்பளம் வழக்கம்போல் உப்பாமல் அதன் தோற்றமும் சுவையும் மாறக்கூடும் என உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேரள அப்பள உற்பத்தியாளர்கள் சங்கம், மாநில உணவுத்துறை அமைச்சரிடம் உதவி கோர முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளின் தனித்தன்மையை கருத்தில்கொண்டு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிக்கு கேரள அப்பள பிரியர்களும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் அப்பளம் அன்றாட உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2023-ம் ஆண்டு தகவலின்படி, அங்கு தினமும் சுமார் 70 லட்சம் அப்பளங்கள் விற்பனையாகின்றன. இதன் தினசரி வர்த்தகம் சுமார் ரூ.50.75 லட்சம் எனவும் கூறப்படுகிறது.
கேரள அப்பளத்தின் தனித்துவமான சுவைக்கும், தோற்றத்திற்கும் அதன் ஈரப்பதம் முக்கியக் காரணமாக இருக்கும் நிலையில், புதிய விதிமுறை உற்பத்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய உணவுகளின் தன்மையை பாதிக்காத வகையில், இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்படுமா என்பதே அப்பள பிரியர்களின் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

