delhi cars pti
இந்தியா

பழைய கார்களுக்கு தடை.. எரிபொருளுக்கு சான்றிதழ் அவசியம்.. காற்று மாசுவால் டெல்லி அரசு அதிரடி!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், பழைய கார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவிர, மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், பழைய கார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவிர, மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அத்துடன் கடும் குளிர், பனியும் சேர்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களில் பாதிப் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றவும், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் பனி காரணமாக விமானச் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் காணப்படும் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு இறங்கியுள்ளது. இதில், ஒரு முக்கிய நடவடிக்கையாக டெல்லியில் இன்றுமுதல் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாகன ஓட்டிகளிடம் இந்த சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். அதனை வைத்திருப்பவர்களுக்கே பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்படும். இதனை கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும்.

கூடுதலாக, போக்குவரத்துத் துறையின் அமலாக்கக் குழுக்கள் பெட்ரோல் பம்புகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் விதிமீறல்களைக் கண்காணித்து, இணங்காத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, முக்கிய எல்லை நுழைவு புள்ளிகள் உட்பட 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

delhi

இதேபோன்று டெல்லியில் பதிவு செய்யப்படாத வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு தடை மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவையும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில், BS-II, BS-III மற்றும் BS-IV வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. BS-VI உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.