அமித் ஷா - விஜய் Pt web
இந்தியா

”தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்கவில்லை” - உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தமிழக முதல்வர் விஜய்க்கு நேரம் ஒதுக்கவும் இல்லை; ரத்து செய்யவும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Premkumar S

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக தனிக்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎம்யூஎல் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக பதவியேற்ற விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். தொடர்ந்து, மே மாத இறுதியில் முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

மோடி - விஜய்

இந்தசூழலில் தான், இன்று (மே 27) காலை முதல்வர் விஜய் டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லம் சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில், காவிரி குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதி தரக்கூடாது, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும். வான்வழி அமைப்பு மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும். இலங்கை சிறைபிடித்த 58 மீனவர்கள். 266 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முதல்வர் விஜய் பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளார். இதைத்

தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா-வையும் முதல்வர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்கவில்லை. இந்நிலையில், விஜயுடனான சந்திப்பை உள்துறை அமைச்சர் ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்தசூழலில் தான், விஜயுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்யவில்லை என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அமித் ஷா

உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டிருந்தார். நேரம் ஒதுக்கினால் தான், ரத்து செய்யமுடியும். எனவே, அமித் ஷா மற்றும் விஜய் சந்திப்பிற்கு நேரம் கொடுக்கவும் இல்லை, ரத்து செய்யவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அமித் ஷா குஜராத் செல்வதால் நாளை விஜயை சந்திக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.