பிரேன் சிங், நிதிஷ்குமார் x page
இந்தியா

மணிப்பூர் | பாஜக அரசுக்கான ஆதரவை திடீரென வாபஸ் பெற்ற நிதிஷ்குமார் கட்சி!

மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

Prakash J

பீகாரில் பாஜக துணையுடன் நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இக்கட்சி, மாநிலம் தவிர இந்திய அளவிலும் பாஜக கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, நிதிஷ்குமாரின் ஆதரவு மத்தியில் பாஜக ஆட்சி அமைய வழிவகை செய்துகொடுத்தது. மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இக்கட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

நிதிஷ்குமார்

மேகாலயாவில் ஆட்சியில் இருக்கும் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு நிதிஷ்குமாரின் கட்சியும் இந்த முடிவை எடுத்துள்ளது. என்றாலும், இதனால் மணிப்பூர் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மணிப்பூரில் அரசுக்கான ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றதால் கூட்டணிக் கட்சியான பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் 2022 சட்டமன்றத் தேர்தலில் JDU ஆறு இடங்களை வென்றது. ஆனால் தேர்தல் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, அதன் ஐந்து எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு மாறி, ஆளுங்கட்சியின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினர். 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு தற்போது 37 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பாஜகவுக்கு ஆதரவாக நாகா மக்கள் முன்னணியின் ஐந்து எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சைகள் ஆதரவு அளித்து, பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளனர்.

நிதிஷ் குமார்

தற்போது மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரே எம்எல்ஏவாக அப்துல் நசீர் மட்டுமே உள்ளார். இதையடுத்து அவர், எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக செயல்படுவார் என கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் வகையில் i-n-d-i-a கூட்டணியை உருவாக்கியவர். பின்னர், அதிலிருந்து விலகிய அவர், மீண்டும் பாஜகவிலேயே தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.