பிகார் முதல்வர் நிதிஷ்குமார் pt web
இந்தியா

நிதிஷ் | பீகாரின் நீண்ட கால முதல்வர் கடந்து வந்த பாதை... 20 ஆண்டுகளாக எப்படி ஜெயிக்கிறார் ?

பீகார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் வாழ்க்கைப் பாதையையும் அவருடைய அரசியல் முக்கியத்துவத்தையும் குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

பீபிகாரின் பக்தியார்பூரில் 1951இல் ஓர் எளிய குடும்பத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியில் பிறந்த நிதிஷ் குமார் அடிப்படையில், ஒரு பொறியாளர். எலக்ட்ரிகல் இன்ஞினியரிங் முடித்து மின் வாரியத்தில் அரசுப் பணியில் இருந்த நிதிஷ் வாழ்வை அரசியலுக்கு திருப்பியது ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின் சிந்தனைகள். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஜெயப்ரகாஷ் நாராயணன் முன்னெடுத்த ‘முழுப் புரட்சி’ இயக்கத்தில் பங்கேற்றவர் தொடர்ந்து, மிகுந்த அரசியல் ஆர்வத்தால், வேலையை உதறிவிட்டு அரசியலுக்குள் வந்துவிட்டார்.

ராம் மனோகர் லோஹியா (left), ஜெயப்பிரகாஷ் நாராயணன் (right)

நிதிஷும் லாலுவும் நெருக்கமான நண்பர்கள். ஆனால், லாலுவைப் போல வசீகரமான பேச்சாளர் அல்லது ஆர்ப்பாட்டமான செயல்பாட்டாளர் என்று நிதிஷைச் சொல்ல முடியாது. அமைதியாக செயலாற்றும் காரியகர்த்தா. தேர்தல் களமும் தோல்வியைத்தான் தந்தது. மனைவி ஊக்கசக்தியாக இருந்தார். மனைவியின் நகைகளை விற்று ஒரு தேர்தலைச் சந்தித்தார். பல சமயங்களில் செலவுக்கு தள்ளாடும் சூழல் நிதிஷுக்கு இருந்தது. அரசுப் பணியில் இருந்த மனைவியின் வருமானம்தான் ஊன்றுகோலாய் இருந்தது. ஆனால், நேர ஒழுங்கைப் பராமரிக்கும், திட்டமிட்டு செயலாற்றும் நிதிஷின் கடும் உழைப்பும், நெகிழ்வான அணுகுமுறையும் அவரை அடுத்தடுத்து இடங்களுக்கு உயர்த்தின.

பிகாரின் சோஷலிஸ இயக்கமும், ஜனதா கட்சியும்தான் நிதிஷின் அடையாளங்கள். லாலுவோடு இணைந்து செயல்பட்டதோடு, லாலுவுக்கு பக்க பலமாகவும் இருந்த நிதிஷ், பீகார் முதல்வராக லாலு பொறுப்பேற்றதும் ஆட்சியில் அவருடைய யாதவ் சமூகம் பெரிய அளவில் ஆக்கிரமித்ததையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் கேள்விக்குள்ளாக்கி கட்சியிலிருந்து வெளியேறினார். சகா ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து ஆரம்பித்த தனி கட்சி பெரும் தோல்வியையே தந்தது. இதற்கு பிறகுதான் லாலு - காங்கிரஸை எதிர்கொள்ள பாஜகவோடு கை கோத்தார் நிதிஷ். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜகவோடு நிதிஷ் உறவில் உள்ளபோதும், மத நல்லிணக்கம் சார்ந்து நிதிஷ் மீது பெரிய விமர்சனங்கள் கிடையாது. எல்லோரையும் அரவணைப்பவர் என்பதே அவரது அடையாளமாக இருக்கிறது. சாதி ஆதிக்கம் செலுத்தும் பீகாரில், மக்கள்தொகை அளவில் சிறிய சமூகம் ஒன்றிலிருந்து வந்த நிதிஷ் எல்லோரையும் அரவணைப்பதன் வாயிலாகவே தொடர்ந்து ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார்

நிதிஷின் பெரிய வாக்கு வங்கி பெண்கள்தான். ஏனென்றால், பெண்களை மையமாக வைத்து வளர்ச்சியைச் சிந்திப்பவர் நிதிஷ். சாயங்காலம் 6 மணி ஆகிவிட்டால், கடைவீதி மூடிவிடும்; பெண்கள் வெளியே செல்ல முடியாது; யாருக்கும் பாதுகாப்பு கிடையாது என்றிருந்த பீகார் சூழலை மாற்றி, சட்டப்படியான ஆட்சியை நிலைநாட்டியவர் நிதிஷ்தான். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் பாதி பிள்ளைகள்கூட வகுப்பறைகளில் இல்லாத சூழலை மாற்றியவர்; அரசு சார்பில் சைக்கிள் கொடுத்து பெண் கல்வியை ஊக்கப்படுத்தியவர். நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்கு உள்ளாட்சி பதவிகளில் 50% இடஒதுக்கீடு, அரசுப் பணிகளில் 35% இடஒதுக்கீடு அளித்தவர். ஜீவிகா குழுக்கள் வழியாக பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிகோலியவர். பிகார் வேளாண்மையை மேம்படுத்தியவர்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அரசு அலுவலர்கள் புடைசூழச் சென்று, கிராமம் கிராமமாக மக்களைச் சந்திப்பார். மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஜனதா தர்பார் நடத்தி கையோடு தீர்வு காண்பார் கட்சிக்காரர்கள் அடாவடியாக நடந்தால், நீக்கிவிடுவார். பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது. ஒரே பிள்ளை. அரசியலுக்கு அவர் வர மாட்டார் என்று நிதிஷ் அறிவித்துவிட்டார். இதெல்லாம்தான் நிதிஷ் மீதான பீகாரிகளின் பிரியத்துக்குக் காரணம்.

பீகாரில் நிதிஷுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று, சுஷாசன் பாபு - அதாவது நல்லாட்சி தந்தை. மற்றொன்று - பல்ட்டு ராம்; அதாவது, அணி தாவுபவர். ஆனால், பீகார் போன்று பல்லாண்டு காலமாக வளர்ச்சியில் கீழேயே இருக்கும் ஒரு மாநிலத்தை முன்னகர்த்த, பெரிய எண்ணிக்கை பலம் இல்லாத நிதிஷ் போன்ற ஒரு அரசியல் தலைவருக்கு வேறு என்ன வழி இந்திய அரசியலில் இருக்கிறது என்று கேட்கும் பீகார் அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். மத்திய அரசோடு உறவாடித்தான் இந்தியாவில் எல்லா திட்டங்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. நிதிஷ் மதியுகத்தோடு உறவைக் கையாளுகிறார். பீகாரில் கடந்த 25 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை திட்டங்கள் நிதிஷின் முயற்சியால் வந்தவை. உள்ளபடி மோடிக்கும் நிதிஷுக்கு ஆகவே ஆகாது. 2014இல் மோடிதான் பிரதமர் முகம் என்று பாஜக அறிவித்ததைக் கண்டித்துத்தான் கூட்டணியிலிருந்தே வெளியேறினார். ஆனால், மோடி எதிர்ப்பைவிட பீகாரின் வளர்ச்சி முக்கியம் என்பதில் நிதிஷ் உறுதியாக இருக்கிறார்.

நிதிஷ் குமார், மோடி

கடந்த, ஒன்றரையாண்டில் மட்டும் 10 அம்ரித் பாரத் ரயில்களை பீகாருக்கு கேட்டு வாங்கியிருக்கிறார்; மோடியின் 11 ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை கேட்டு வாங்கியிருக்கிறார். வேறு எந்த மாநிலத்தில் இதெல்லாம் நடக்கும் என்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நிதிஷ் தொடர்ந்து ஜெயிக்கிறார். ஆனால், பீகாரிகளுக்கு ஒரு கவலை இருக்கிறது. சமீப காலமாக அவர் உடல்நலமும், மனநலமும் உற்சாகமாக இல்லை; வெளியே வருவது குறைந்துவிட்டது; சீக்கிரமே பழைய நிலைக்கு நிதிஷ் திரும்ப வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.