ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது, பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில், தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020-இன்படி, 2026-27ஆம் கல்வியாண்டிற்காக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தயாரிக்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தயாரித்த புத்தகங்களில், எளிய எழுத்துப் பிழைகள் மட்டுமின்றி, பல மோசமான வரலாற்று, அறிவியல் மற்றும் புவியியல் பிழைகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சுமார் 1,678 பிழைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மட்டும் மிக அதிகமாக 705 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி 8ஆம் வகுப்பு புத்தகத்தில், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், (Sir Isaac Newton), ஒரு சிறந்த விமானி (Greatest Pilot) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக சட்டமன்றத்தின் (Vidhan Soudha) புகைப்படம் ஒடிசா சட்டமன்றத்தின் புகைப்படம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, கர்நாடகாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'ஹம்பி' (Hampi) கோயில் வளாகம், ஒடிஷாவின் அடையாளம் சொல்லும் 'கோனார்க் சூரியக் கோயில்’ (Konark Sun Temple) என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசாவின் ’நியாம்கிரி மலைத்தொடர்' (Niyamgiri Hills) அண்டை மாநிலமான ஜார்கண்டில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் (Berhampur) என்ற நகரம் ஒரு ’தனி மாவட்டம்’ என எழுதப்பட்டுள்ளது. இவை தவிர, சில அறிவியல் அத்தியாயங்களிலும் பிழைகள் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அறிவியல் பாடங்களில் வெப்பநிலை (Temperature) என்பதற்குப் பதிலாக அழுத்தம் (Pressure) என்றும், உணவு வலை (Food Web) என்பதற்குப் பதிலாக உணவுச் சுழற்சி (Food Cycle) என்றும் அச்சிடப்பட்டுள்ளது. புவியியலில் 'ஈக்வினாக்ஸ்' (Equinox - சம இரவு பகல் நாள்) என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஈக்வேட்டர்' (Equator - பூமத்திய ரேகை) என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஒடிஷா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி (Mohan Charan Majhi) அவசரக் கூட்டத்தைக் கூட்டி, இந்தத் தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், புத்தகங்கள் ஏற்கெனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டதாலும், மீண்டும் அச்சடிக்க 6 மாதங்களுக்கும் மேலாகும் என்பதாலும் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. எனினும், பாடப்புத்தகப் பிழைகள் அனைத்தையும் தொகுத்து அரசாங்கம் திருத்தப் பட்டியலை (Corrigendum) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது அந்தப் பிழைகளைச் சுட்டிக்காட்டி, நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திருத்தப்பட்ட புதிய பதிப்புகள் அடுத்த கல்வியாண்டில் (2027-28) கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.