ஒடிசா | கட்டாக் முதல் கடாகா வரை.. 64 ஊர்களின் பெயர்களை மாற்றும் பாஜக அரசு.. என்ன காரணம்?
ஒடிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 64 ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட இருக்கிறது. இதற்கான இதற்கான ஒப்புதலை ஒடிசா அமைச்சரவை அளித்துள்ளது. அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அந்த இடங்களில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பலகைகளில் உள்ள பெயர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, மாநிலத்தின் முக்கிய நகரமான கட்டாக்கின் பெயர் கட்டக்கா என மாற்றப்பட உள்ளது.
மேலும், பாலசூர் என்ற பெயர் பாலேஸ்வர் என்றும், பெர்ஹாம்பூர் என்ற பெயர் பிரம்மபூர் என்றும், அங்குல் என்ற பெயர் அனுகோலா என்றும் தியோகர் என்ற பெயர் தியோகடா என்றும், அவுல் என்ற பெயர் ஆலி என்றும், கியோஞ்சர் என்ற பெயர் கெண்டுஜர் என்றும், ஜெய்பூர் என்ற பெயர் ஜெயபூர் மாற்றப்பட் உள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா தலைமைச் செயலாளர் அனு கார்க், ஒரிய மொழிப் பெயர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தவறாக எழுதப்பட்டதாகவும் அவை தற்போது திருத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒடிசாவின் மொழிப் பாரம்பரியம், கலாசார அடையாளம் மற்றும் வரலாற்று நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, இதுகுறித்த பெயர்களை ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர்களிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக, புகழ்பெற்ற ஒடியா இலக்கியவாதியும் ஞானபீட விருது பெற்றவருமான டாக்டர் பிரதிபா ராய் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் அமைத்திருந்தது. இதற்கு முன்பு, மாநிலத்தின் பெயர் ஒரிசா என அழைக்கப்பட்டு வந்த நிலையில் 2011இல் அது ஒடிஷா என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

