Govt of India approves 2- slabs GST rates FB
இந்தியா

இன்றுமுதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிக் குறைப்பு.. எந்தெந்த பொருட்களுக்கு விலை குறைவு?

நவராத்தி பண்டிகை இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான மறுசீரமைக்கப்பட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

PT WEB

நவராத்தி பண்டிகை இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான மறுசீரமைக்கப்பட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூடி, வரி விகித அடுக்குகளை குறைத்து பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்த முடிவெடுத்தது. 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டு 5 மற்றும் 18 சதவீத வரிகள் மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 375க்கு மேற்பட்ட பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. இது சோப், ஷாம்பூ, டூத்பேஸ்ட் போன்ற தினசரி வீட்டுபயோக பொருட்களில் இருந்து இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஏசி, டிவி போன்றவற்றின் விலை குறைய வழிவகுத்தது. வரிக்குறைப்பிற்கு பின் பொருட்களுக்கான புதிய விலையுடன் கூடிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் பொதுமக்கள் கையில் கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி

ஹேர் ஆயில், ஷாம்பு, பேஸ்ட், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய், சீஸ் போன்ற பால் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், பாத்திரங்கள், டயப்பர், நாப்கின்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் டயர்கள் மற்றும் பாகங்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், டிராக்டர்கள், உயிரி உரம், பூச்சிகொல்லிகள், சொட்டுநீர் பாசனம், ஸ்பிரிங்க்லர்கள், விவசாய இயந்திரங்களுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தொடர்ந்து பல்வேறு வீட்டு உபயோக சாதனங்கள் விலையும் குறைந்துள்ளது. வோல்டாஸ், டாய்கின், கோத்ரெஜ், பானசோனிக், ஹேயர் போன்ற நிறுவனங்கள் விலைக் குறைப்பு விவரங்களை அறிவித்துள்ளன. ஏசிக்களின் விலை அவற்றின் திறனை பொருத்து 3 ஆயிரத்து 200 ரூபாய் முதல் விலை குறைக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவும் டிஷ் வாஷர்களுக்கான விலைகளும் குறைக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தொடர்ந்து டிவிக்களின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் வரை குறைய உள்ளது. சோனி, எல்ஜி, பானசோனிக் போன்ற முன்னணி நிறுவனங்கள் விலைக்குறைப்பை ஏற்கனவே அறிவித்துள்ளன. சோனி நிறுவனத்தின் டிவி விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 71 ஆயிரம் ரூபாய் வரை குறைகிறது. எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 85 ஆயிரத்து 800 ரூபாய் வரை விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. பானசோனிக் நிறுவனம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரை விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. 32 அங்குல தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி 28இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

model image

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் ஆடைகள் விலையும் மாற்றத்தை காண உள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள ஆடைகளுக்கு 5% வரியும் இதற்கு மேற்பட்ட விலையுள்ள ஆடைகளுக்கு 12% வரியும் விதிக்கப்பட்டு வந்தது. இனி ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரையுள்ள ஆடைகளுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேற்பட்ட விலையுள்ள ஆடைகளுக்கு 18% வரி விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கீழுள்ள ஆடைகளுக்கு வரி குறைந்தாலும் இத்தொகைக்கு மேற்பட்ட தொகையுள்ள ஆடைகளுக்கு கூடுதலாக 6% வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.