நாடாளுமன்றம் pt web
இந்தியா

கைது செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்கம்.. புதிய மசோதா அறிமுகம்!

கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பதவியில் இருந்து நீக்குவதை உறுதி செய்யும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

Prakash J

பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள்தீவிர குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களைப் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.

மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதா

மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அடிக்கடி சோதனையில் ஈடுபடுகிறது. அத்தகைய சோதனைகளில் ஈடுபட்டு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர்கள், அமைச்சர்கள் அரசின் சுமுகமான செயல்பாட்டிற்காகக் கைது செய்யப்படுவதற்கு முன்பே பதவி விலகுகின்றனர். இன்னும் சிலரோ, கைது செய்யப்பட்டும் சிறையில் இருந்தபடியே ஆட்சியைத் தொடர்கின்றனர். அந்த வகையில் டெல்லியில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த ஆண்டு கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் ஆறு மாதங்கள் சிறையில் இருந்து அரசாங்கத்தை வழிநடத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இப்படி, தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்க வழிசெய்யும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.அதாவது, பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள்தீவிர குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களைப் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காகவும் அனுப்பப்பட உள்ளது.

புதிய மசோதா குறிப்பிடுவது என்ன?

தீவிரமான குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் பிரதமரோ, மத்திய அமைச்சரோ மாநில முதல்வர்கள் அல்லது மாநில அமைச்சர்களோ கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால், அவர்களை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க இந்த மசோதா வகை செய்கிறது. 31வது நாள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தானாகவே அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

நாடாளுமன்றம்

எந்த வகையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கங்கள் இல்லை என்றாலும், கூறப்படும் குற்றம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இது கொலை மற்றும் பெரிய அளவிலான ஊழல் போன்ற கடுமையான குற்றங்களை உள்ளடக்கும் எனவும் மசோதாவில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இம்மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளனர்.