ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த நேபாளத்தைச் சேர்ந்த ப்ரகிரீத்தி லாம்சல் என்ற மாணவி, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மாலை அவரது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி அக்கல்லூரியில் பயிலும் பிற நேபாள மாணவர்கள், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் முன் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
போராட்டங்களுக்கு மத்தியில் வளாகத்தில் நிலைமை மோசமடைந்ததால், அக்கல்லூரியின் அதிகாரிகள் அனைத்து நேபாள மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்றியதுடன், அவர்களின் பயணத்திற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் கட்டாக் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. எனினும், இதற்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதில், “பலகலை வளாகத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த உடனேயே, போலீசார் இந்த விஷயத்தை விசாரித்து குற்றவாளியைக் கைது செய்தனர். பல்கலை நிர்வாகம் வளாகத்திலும் விடுதிகளிலும் இயல்பு நிலையை மீட்டெடுக்க முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வளாகத்தைவிட்டு வெளியேறிய மற்றும் வெளியேற திட்டமிட்டுள்ள அனைத்து நேபாள மாணவர்களும் திரும்பி வந்து வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, “நேபாள மாணவர்களை சிறப்புப் பேருந்து மூலம் புவனேஸ்வருக்கு அழைத்து வருமாறு பல்கலைக்கழகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது” என மாநில உயர்கல்வி அமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ் தெரிவித்துள்ளார். அதன்பேரில், மாணவர்களின் கல்வி இழப்புகளை நிறுவனம் கவனித்துக் கொள்ளும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் மரணம் எய்திய மாணவியின் தந்தை, கல்லூரி நிர்வாகம் மோசமாக நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் நேபாள பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு அரசு ராஜதந்திர முறையில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினார். மேலும், 'மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கவோ அல்லது தாயகம் திரும்பவோ முடிவு செய்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று (பிப்.18) அந்நாட்டு தூதரக அதிகாரிகள் மரணமடைந்த மாணவி பயின்று வந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு நேரில் வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியேற்றப்பட்ட மாணவர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.