சீமா சிங் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் தேர்தல் | ஆளும் கூட்டணி வேட்பாளர் மனு நிராகரிப்பு.. யார் இந்த சீமா சிங்?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி வேட்பாளரான நடிகை சீமா சிங் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Prakash J

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி வேட்பாளரான நடிகை சீமா சிங் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நிறைவடைந்து, மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில், மா்ஹவரா தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) சாா்பில் போஜ்பூரி நடிகை சீமா சிங் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தாா். ஆனால், நடைமுறை சாா்ந்த காரணங்களால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

சீமா சிங்

மேலும், இந்தத் தொகுதியில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் பன்முகக் கட்சியின் மதுபாலா கிரி, சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் அல்தாஃப் ஆலம் ராஜு, மற்றொரு சுயேச்சையான விஷால் குமார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதித்ய குமார் ஆகியோர் அடங்குவர். இதனால், தற்போதைக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர் ஜிதேந்திர ராய் மற்றும் ஜன் சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) வேட்பாளர் நவீன் குமார் சிங் என்ற அபய் சிங் இடையே நேரடி போட்டிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘சிறிய குறைபாடு காரணமாக எங்கள் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளோம், இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என நம்புகிறேன்’எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த நடிகை சீமா சிங்?

42 வயதான சீமா சிங் ஒரு போஜ்புரி நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். அவர், 500க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். மராத்தி, குஜராத்தி, இந்தி, தமிழ், பெங்காலி மற்றும் ராஜஸ்தானி படங்களிலும் குத்துப் பாடல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். ராம் விலாஸ் கட்சியால் அவர் நிறுத்தப்பட்டபோது, ​​மர்ஹௌரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஒரு வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சீமா கருதப்பட்டார்.

சீமா சிங்

சீமா சிங், பீகாரின் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சவுரவ் சிங்கை மணந்தார். சிமா சிங்கின் பிரமாணப் பத்திரத்தின்படி, மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி-ரிட்டன்னில் அறிவிக்கப்பட்ட அவரது மொத்த வருமானம் ₹ 5,48,011 ஆகவும், கடந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானம் ₹ 4,99,782 ஆகவும் இருந்தது. அவரது வாக்குமூலத்தின்படி, சீமா சிங் மீது ஒரு குற்றவியல் வழக்கும் நிலுவையில் உள்ளது, அதில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.