ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில், ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலும் பலியானார். தவிர, பயங்கரவாதிகள் அவரைக் கொல்வதற்கு முன் அவரது மதம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. திருமணமான ஆறு நாட்களில் தனது மனைவி ஹிமான்ஷி நர்வாலுடன் தேனிலவுக்காக ஜம்மு காஷ்மீருக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இது, அவருக்குச் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தியது. மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட கணவருக்கு அருகில் அப்படியே சோகத்தில் உறைந்து அமர்ந்திருந்த இவருடைய புகைப்படம், உலகம் முழுவதும் காண்போரையும் கண்கலங்க வைத்தது.
இந்த நிலையில், பஹல்காமில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் மனைவி விமர்சிக்கப்படுவதை, தேசிய மகளிர் ஆணையம் கண்டித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாகப் பேசிய ஹிமான்ஷி நர்வால், ”வினய் எங்கிருந்தாலும் அவர் நிம்மதியாக இருக்க வேண்டும். முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதுதான் எங்களின் விருப்பம். யார் மீதும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லீம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்” என தெரிவித்தார். இதனை சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து ஹிமான்ஷிக்கு எதிரான விமர்சனங்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. "பெண் ஒருவரை, அவருடைய கருத்து வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் கேலி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. லெப்டினென்ட் வினய் நர்வால் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது" என்று ஹிமான்ஷிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஹிமான்ஷி நர்வாலின் கருத்துகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால், அதனை வெளிப்படுத்துவது அரசமைப்பு வரம்புகளுக்குள்ளும், நாகரிகமானதாகவும் இருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.