“காஷ்மீர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம்” - உயிரிழந்த வினய் நர்வாலின் மனைவி பேட்டி!
ஜம்மு காஷ்மீரின் அனந்த நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தவர்கள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் பலர் காயமடைந்தனர். இதனால், அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
இறந்த 26 பேரில் திருமணமாகி சில நாட்களே ஆன 26 வயதான வினய் நார்வால் என்ற கடற்படை வீரரும் ஒருவர். கடந்த 16ம் தேதி இவருக்கு திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து, சொந்தங்கள் சூழ 19ம் தேதி திருமண வரவேற்பு நடந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மனைவியை அழைத்துக்கொண்டு Honey Moon-க்காக காஷ்மீர் சென்றுள்ளார். அப்படி சென்ற நேரத்தில்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானார். இந்தநிலையில், இறந்த கடற்படை வீரர் வினய் நார்வாலின் மனைவி வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்.
உயிரிழந்த வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ஹரியானாவில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற போது ஹிமான்ஷி நர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக யாரும் செயல்பட வேண்டாம். எங்களுக்கு அமைதி வேண்டும்.. அமைதி மட்டுமே வேண்டும். அதேபோல எனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்ட நிலையில், சமூக ஊடகங்களில் சிலர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும், காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.