தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் NCP கட்சியினர் x
இந்தியா

மகாராஷ்டிரா | அஜித் பவார் மரணத்தில் மர்மம்? சிபிஐ விசாரணை கோரும் மனைவி!

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவியும் துணை முதல்வருமான சுனேத்ரா பவார் உட்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Premkumar S

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய அவரது மனைவி சுனேத்ரா பவார், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து மனு அளித்துள்ளார். விமான விபத்தில் மரணமடைந்த அஜித் பவாரின் மரணம் சதி என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புனேயில் இருந்து அவர் பாராமதிக்கு தனி விமானத்தில் சென்றார். அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, ​​இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, ஓர் உதவியாளர், விமானி-இன்-கமாண்ட் மற்றும் முதல் அதிகாரி என 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கை மத்திய விமான விபத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

ajit pawar, suntera pawar

அஜித் பவாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையில், ”அஜித் பவாரின் மரணம் ஒரு விபத்து அல்ல, அதில் சதி இருக்கலாம்” என்று தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. இத்தகைய சூழலில்தான், துணை முதல்வர் சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரஃபுல் படேல், மாநிலத் தலைவர் சுனில் தட்கரே மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் இன்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேரில் சந்தித்தனர். அப்போது, அஜித் பவார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு அளித்துள்ளனர்.

முன்னதாக, அஜித் பவாரின் மருமகன் ரோஹித் பவார், விபத்து நடந்து 20 நாட்களாகியும் விசாரணை மந்தமாக நடக்கிறது எனவும், அஜித் பவாரின் மரணம் விபத்தல்ல, ஒரு திட்டமிடப்பட்ட சதி எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தொடர்ந்து, தனியார் நிறுவனம் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார். இது மகாராஷ்டிர மாநில மக்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.

அஜித் பவார் விமான விபத்து

மேலும், விமானத்தின் ’கருப்புப் பெட்டி’ கடும் வெப்பத்தால் சேதமடைந்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்ததும், மேலும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்தது. இந்த சூழலில்தான், மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்க மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை அவசியம் என்று சுனேத்ரா பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.