உலகளாவிய எரிபொருள் நெருக்கடி, ஈரான் போர் காரணமாக உருவான பொருளாதார சவால்களை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பை 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார். புளூ புக் பாதுகாப்பு நெறிமுறைகள் மாற்றமின்றி, தேவையற்ற வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களை அதிகப்படுத்தவும், புதிய வாகனங்கள் வாங்காமல் கையிருப்பு வாகனங்களையே பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமருக்கான பாதுகாப்பு என்பது எப்போதும் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்புகளுடன்தான் அடையாளப்படுத்தப்படும். ஆனால், இப்போது அந்த பிம்பம் மாறத் தொடங்கியிருக்கிறது. உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், "சிக்கனத்தை தம்மிலிருந்தே தொடங்குவோம்" என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஈரான் போர் காரணமாக நிலவும் பொருளாதார சூழலை எதிர்கொள்ள, தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பை 50 சதவீதம் குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பிரதமருக்கான பாதுகாப்பு விதிமுறைகளான புளூ புக் (Blue Book) நெறிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், தேவையற்ற வாகனங்களை மட்டும் நீக்க சிறப்பு பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் செலவைக் குறைக்க தனது அணிவகுப்பில் மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தவும் பிரதமர் யோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக, இதற்காகப் புதிய வாகனங்களை வாங்கக்கூடாது என்றும், தற்போது கையிருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மாற்றங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன. அண்மையில் பிரதமர் குஜராத் மாநிலத்தின் வதோதரா (Vadodara) மற்றும் அசாம் மாநிலத்தின் குவஹாத்தி (Guwahati) ஆகிய இடங்களுக்குச் சென்றபோது, அவரது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டிருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
பிரதமரின் இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் தங்களது கான்வாய் வாகனங்களைக் குறைத்து வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் (C.R. Patil) தனது பாதுகாப்பு எஸ்கார்ட் வாகனத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் (Mohan Yadav) தனது வாகனங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 8-ஆகவும், ராஜஸ்தான் (Rajasthan) முதல்வர் பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma) 15-லிருந்து 5-ஆகவும் குறைத்துள்ளனர்.
முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க பொதுமக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மக்கள் மெட்ரோ இரயில், பேருந்து மற்றும் கார் பகிர்வு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
அதேபோல், தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தள்ளிப்போடுமாறும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார். நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையையும், இணைய வழி கூட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இறக்குமதிச் சுமையைக் குறைக்க சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல், ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயம் செய்தல் மற்றும் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதன் மூலம் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.