இந்திய இளைஞர்கள் சீனாவின் 9-9-6 முறையைப் பின்பற்ற வேண்டும் என நாராயண மூர்த்தி வலியுறுத்தியுள்ளார். வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற அவரது கருத்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சீனாவுடன் ஒப்பிடும் வகையில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
”இந்தியர்கள் தங்கள் வேலை நேரத்தை வாரத்திற்கு குறைந்தது 70 ஆக நீட்டிக்க வேண்டும்” என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி அடிக்கடி பேசி வருகிறார். இதனால் அவர் அவ்வப்போது விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார். இந்த நிலையில் சீனாவின் 9-9-6 முறையை மேற்கோள் காட்டி, அவர் பேசியிருப்பது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”சீனாவைப் போன்று நமது நாடும் இதே வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் இளம் இந்தியர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். சீனாவில், 9-9-6 எனச் சொல்லப்படுவது உண்டு. அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிய வேண்டும். அதாவது, 72 மணி நேரம் பணிபுரிய வேண்டும் வலியுறுத்துகிறது. இந்திய இளைஞர்கள் இதேபோன்ற வேலை நேரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தான் நம்புகிறேன். இந்தியா 6.57% பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இது, நியாயமான வேகம். ஆனால் தற்போது ஆறு மடங்கு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவைப் பிடிக்க சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அசாதாரண அர்ப்பணிப்பு தேவைப்படும். நாம் அதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், வேலை எளிதானது அல்ல. அதற்கு முன்பாக தனிநபர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
சீனாவில் சொல்லப்படும் இந்த 9-9-6 விதியானது, ஒருகாலத்தில் அந்நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களில் பொதுவாகக் காணப்பட்ட ஒரு பணி அட்டவணையைக் குறித்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது வாரத்திற்கு 72 மணி நேர வேலைக்குச் சமமானது. சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின்போது, குறிப்பாக அலிபாபா மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்களில் இந்த நடைமுறை பிரபலமடைந்தது,
ஆனால் இது அதிக மன அழுத்தம், சோர்வு மற்றும் மோசமான வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்தியதற்காக கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. 2021ஆம் ஆண்டில், சீனாவின் உச்ச நீதிமன்றம் 9-9-6 அட்டவணையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது, இருப்பினும் அமலாக்கம் சீரற்றதாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் அந்த விதியை என்.ஆர்.நாராயண மூர்த்தி மேற்கோள் காட்டியுள்ளார்.