”வறுமை ஒழிய இலவசம் வழங்கும் கலாசாரத்தை ஒழிக்கணும்” - Infosys நாராயண மூர்த்தி மீண்டும் சர்ச்சை!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர், என்.ஆர்.நாராயண மூர்த்தி. இவர் வாரம் 6 நாள் வேலைக்கு ஆதரவு தெரிவித்து அவ்வவ்போது கருத்து தெரிவித்து வருகிறார். ”இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு அவசியம் தேவை. அதற்கு வாரத்துக்கு 6 நாள் வேலை முக்கியம் என்ற நிலைப்பாட்டில், நான் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி வருகிறார். அவருடைய கருத்துக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன. அது, தற்போதும் தொடர்கின்றன. இந்த நிலையில், ”இந்தியாவில் வறுமை ஒழிய வேண்டும் என்றால் இலவசங்களை வழங்கும் கலாசாரம் மாறி வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கலாசாரத்தைக் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
டை கான் மும்பை 2025 என்ற நிகழ்வில், முன்னாள் டை மும்பை நிறுவனத் தலைவர் ஹரிஷ் மேத்தாவுடன் அவர் உரையாடியபோது இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். அப்போது அவர், “புதுமையான நிறுவனங்களை நம்மால் உருவாக்க முடிந்தால் வெயில் வந்தவுடன் விலகிச் செல்லும் பனியைப்போல வறுமை ஒழிந்து விடும். இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இதுதான் நம் நாட்டில் வலிமையை ஒழிக்க உதவும்.
வறுமையை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக, இலவசங்களை வழங்கி நம்மால் வறுமையை ஒழித்துவிட முடியாது. எந்த ஒரு நாடும் இப்படி வெற்றியடைந்தது கிடையாது. எனக்கு அரசியல் பற்றியோ அல்லது ஆளுமை பற்றியோ பெரிய அளவில் தெரியாது. ஆனால் ஒரு நாட்டிற்காக கொள்கைகளை உருவாக்கக்கூடிய பார்வையில் மட்டுமே இலவசங்களை ஒழித்து வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற பார்வையை நான் முன்வைக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் காலத்தின்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் இலவசம் பற்றிய ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. பின்னர், ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் இந்தியாவில் இலவசங்களுக்கு சாதகமாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, மத்தியில் இருக்கும் பாஜக, கடந்த காலங்கள் இலவசங்களைக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், அது ஆளும் பல மாநிலங்களில் இலவசங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இலவசங்கள் குறித்த வழக்கில், ”மத்திய, மாநில அரசுகள் வழங்கக்கூடிய இலவச பொருட்கள் மற்றும் பிற நேரடி பணப்பலன் திட்டங்கள் காரணமாக பெரும்பாலான மக்கள் வேலைக்குச் செல்வதற்கோ சம்பாதிப்பதற்கோ விரும்புவதில்லை” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
சமீபத்தில், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவன தலைவராக உள்ள எஸ்.என்.சுப்ரமணியனும், “சமீபகாலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவிர, அவர்கள் வேலைக்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புலம்பெயர்வதைக்கூட விரும்புவதில்லை. இதற்கு, அரசாங்கம் செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களும் ஒரு காரணமாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.