doctor
doctor file image
இந்தியா

டீ கொடுக்கவில்லை என ஆபரஷனில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டாக்டர்.. மயக்க நிலையில் இருந்த 4 பெண்கள்!

யுவபுருஷ்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக 8 பெண்கள் வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்ததாக அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான மருத்துவக்குழுவும் சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.

சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது, தனக்கு டீ வேண்டும் என்று கேட்டுள்ளார் மருத்துவக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் பாலவி. ஆனால், நெடுநேரமாக மருத்துவமனை ஊழியர் டீ கொண்டு வராததால், கோபித்துக்கொண்டு சட்டென ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். இதில் கொடுமை என்னவெனில், 4 பேருக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், மற்ற 4 பேருக்கு மயக்க மருந்து போடப்பட்டு, மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

இந்த அலட்சியப்போக்கு குறித்து, மயக்க நிலையில் இருந்த பெண்களின் குடும்பத்தார், மாவட்ட மருத்துவத்துறையினருக்கு அழைத்து பேசியுள்ளனர். இதனையடுத்து, மற்றொரு மருத்துவரை அழைத்த மருத்துவமனை நிர்வாகம், மீதமிருந்தவர்களுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகார்ம் பூதாகரமான நிலையில், டீ கிடைக்காததால் அலட்சியமாக அறுவை சிகிச்சையில் இருந்து வெளியேறிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து, மாவட்ட மருத்துவ நிர்வாகம் சார்பில், தனிக்குழு அமைத்து மருத்துவர் பாலவி விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.