Elephant viral video FB
இந்தியா

வீடியோ | 55 ஆண்டுகளாக பிரியாத நண்பர்கள்: பாமா, காமாட்சி யானைகள்..!

அழகான இரு உயிரினங்களுக்கு இடையேயான நட்பை வனத்துறை பேணிப் பாதுகாத்து வருகிறது. யானைகளிடம் இருந்தும் மனிதர்கள் சிலவற்றை கற்கலாம்..

Vaijayanthi S

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், பாமா மற்றும் காமாட்சி என்ற இரண்டு யானைகள் 55 ஆண்டுகளாக சிறந்த நண்பர்களாக உள்ளன. இந்த நட்பின் கதை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 75 வயதுடைய பாமா மற்றும் 65 வயதுடைய காமாட்சி, மனிதர்களைப் போலவே பாசத்துடனும், விசுவாசத்துடனும் பழகி வருகின்றன..

ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரும் முதலாவது ஞாயிற்றுக்கிழமையானது உலகம் முழுவதும் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உருவத்தில் மட்டுமல்ல, இணை பிரியா நட்பிலும் உயர்ந்து நிற்கும் யானைகளின் நட்பை நினைவு கூரலாம். நட்பு என்ற வார்த்தை மானுடர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இந்த உலகில் வாழும் எறும்பு முதல் யானைவரை எந்த ஒரு உயிரினத்துக்கும் நண்பர்களும் நட்பும் இருக்கலாம் தானே.

ஆம். நீலகிரி மாவட்டம் முதுமலைதெப்பக்காடு யானைகள் முகாமில்வசிக்கும் பாமா என்ற 75 வயதானயானையும் காமாட்சி என்ற 65 வயதுயானையும் கடந்த 55 ஆண்டுகளாக பிரிக்க முடியாத நண்பர்களாக உள்ளன. தமது எக்ஸ் வலை தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் சுப்ரியா சாகு, முதுமலை தெப்பக்காடு முகாமில் இருக்கும் பாமாவும், காமாட்சியும் இணை பிரியாநட்பை கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.

கரும்புகளை உண்பதற்கு, முகாமில் எப்போதும் பிரியாமல் ஒன்றாகவே திரிவது என ஒருவரை விட்டு மற்றொருவரை பிரிக்க முடியாத அளவுக்கு நட்புடன் திகழ்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். நட்பு என்பது மானுடர்களுக்கு மட்டுமானதாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த அழகான இரு உயிரினங்களுக்கு இடையேயான நட்பை வனத்துறையும் தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது என்றுகூறியுள்ளார்.

30 யானைகள் கொண்ட இந்த முகாமில் அன்பின் அடையாளமாக, விசுவாசமான, வாழ்க்கை முழுவதும் நீடித்திருக்கும் நட்புக்கு அடையாளமாக திகழ்கின்றன என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு பின்னூட்டம் இட்டுள்ள ஒருவர், பெரும் ஆன்மாக்களாக திகழும் யானைகளின் வாழ்க்கையில் இருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருப்பது இந்த தருணத்துக்கு பொருத்தமானதாகும்.