கர்நாடக மாநிலம் மைசூரு முடாவில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டுமனைகள் வாங்கியதாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நில உரிமையாளர் தேவராஜ் மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். மூன்று மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்றதால், அறிக்கை தாக்கல் செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர் என்று, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபடலாம் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று லோக் ஆயுக்தா போலீசார், ”இந்த வழக்கில் போதிய சாட்சி, ஆதாரம் இல்லை. இந்த வழக்கு விரசனைக்கு ஏற்றதல்ல. விரைவில் நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யப்படும்” எனக் கூறி புகார்தாரர் கிருஷ்ணாவிற்கு லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.