கர்நாடகா| மூடா வழக்கில் புதிய திருப்பம்.. நிலத்துக்கு உரிமைகோரி வழக்கு தொடர்ந்த பெண்!
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தும் மூடா வழக்கு
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் லே-அவுட்டில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, மூடா வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் குடும்பத்திற்கு சட்டவிரோதமாக 14 மனைகள் ஒதுக்கப்பட்டது. மைசூருவின் புறநகரில் உள்ள கேசரே கிராமத்தில் சர்ச்சைக்குரிய 3.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்த மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு அதிகாரிகளுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நிலத்தைத் திருப்பித்தர முடிவுசெய்த முதல்வரின் மனைவி
மேலும் டிசம்பர் 24-ஆம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு லோக்ஆயுக்தா போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கர்நாடக லோக்ஆயுக்தா போலீஸார் கடந்த நவம்பர் 6ஆம் தேதி சித்தராமையாவிடம் விசாரணை நடத்தினர். கர்நாடக அரசியலில் புயலை வீசியுள்ள இந்தச் சம்பவத்தில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
இதற்கிடையே, நில முறைகேடு விவகாரம் தொடர்பாக, சித்தராமையாவின் மனைவி பார்வதி, மூடா அமைப்பிற்கு எழுதிய கடிதத்தில், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பித் தருவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை, ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
மூடா வழக்கில் புதிய திருப்பம்|புதிய வழக்கு தொடர்ந்த பெண்
இந்த நிலையில், மூடா நில ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைகோரி பெண் ஒருவர் சிவில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சர்வே எண் 64ல் உள்ள சர்ச்சைக்குரிய நிலம், கேசரே கிராமத்தில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் அசல் உரிமையாளராக இருப்பவர், ஜமுனா. அதாவது, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நிலம் தேவராஜுவுக்குச் சொந்தமானது அல்ல என ஜமுனா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ’எனது தந்தை மறைந்த மயிலரய்யாதான் நிலத்தின் உண்மையான உரிமையாளர். முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, தேவராஜிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கி, அவரது சகோதரி, முதல்வரின் மனைவி பார்வதிக்குப் பரிசாக அளித்துள்ளார். சொத்து உரிமையை எங்கள் பெயருக்கு மாற்றுவதாக கூறி தேவராஜு எனது தாய் மற்றும் சகோதரர் மஞ்சுநாத சுவாமியிடம் கையெழுத்து வாங்கினார். பின்னர், மோசடியாக விற்கப்பட்டது. எங்களுக்கு இழப்பீடு தேவை, இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்’ என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனுதாரர் ஜமுனா, ”எங்களது நிலம் முதல்வர் சித்தராமையாவின் மைத்துனருக்கு விற்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் அறிந்து, பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜமுனாவின் சகோதரர் மஞ்சுநாத சுவாமி, ”தேவராஜு எனது குடும்பத்தை ஏமாற்றி, அவர்களது நிலத்தை தனது சொத்து என்று கூறி விற்றுள்ளார். இந்த சொத்து எங்கள் தந்தையிடமிருந்து எங்களுக்கு கிடைத்தது, இது முதல்வர் சித்தராமையாவின் குடும்பத்திற்கு மோசடியாக விற்கப்பட்டது. இதன் காரணமாகவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு மைசூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அக்டோபர் 21-ஆம் தேதிமுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது. தற்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.