தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதை இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கீழடி அகழாய்விற்கு காரணகர்த்தாவாக அறியப்பட்டவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். 2014 மற்றும் 2016 என இரு கட்டங்களாக அவர் மேற்கொண்ட அகழாய்வில் கீழடியின் பழமை மற்றும் தொன்மை அறியப்பட்டது. தமிழர்களின் தொடக்க நாகரீகமாக வைகை நதி நாகரீகம் இருந்தது என்பதை கீழடியில் அமர்நாத் கண்டெடுத்த தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்தின.
இத்தகைய சூழலில் அமர்நாத் வெளியிட்ட அறிக்கையை இந்திய தொல்லியல் துறை நிராகரித்தது. நிராகரித்ததன் காரணமாக அறிக்கை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில்தான் இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்தவாரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, அறிவியல் பூர்வமாக கீழடி பழமையானது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக அதிலிருக்கும் தரவுகள் எல்லாம் அறிவியல் பூர்வமாக சான்றுகளுடன் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதாவது கூடுதல் அறிவியல் சான்றுகள் தேவை என மத்திய கேட்டிருந்தார். தமிழ்நாடு முழுவதிலுமிருக்கும் தொல்லியல் ஆர்வாளர்களிடையே இந்த பதில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான் அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பணியிட மாற்றம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய எம்பி சு.வெங்கடேசன், “தமிழின் தொன்மையையும், கீழடியின் உண்மையையும் நிலைநிறுத்த தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் அகழாய்வு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியின் தொன்மைக்கும் உண்மைக்கும் அவருடைய அகழாய்வு மிக முக்கியமான பங்கினை செலுத்துகிறது. அந்த ஒரே காரணத்திற்காக கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றிய அரசால் அமர்நாத் வேட்டையாடப்படுகிறார்.
மதுரையிலிருந்து கவுகாத்திக்கும், கவுகாத்தியிலிருந்து கோவாவுக்கும், கோவாவிலிருந்து சென்னை, அடுத்து டெல்லி, இப்போது நொய்டா என ஒவ்வொரு இடமாக மாற்றப்படுகிறார். இந்த ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அந்த பின்னணி கீழடி உண்மையோடு தொடர்புடையது. கடந்த வாரம் ஒன்றிய அமைச்சர் கொடுத்த பேட்டியே அவர்கள் எவ்வளவு கோபத்தோடும் ஒவ்வாமையோடும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
தமிழ்நாட்டு அகழாய்வு அல்லது தென்னிந்திய வரலாற்றுக்காக ஒரு வரலாற்றாளர் உறுதியோடு இருந்தால் அவர் எப்படி வேட்டையாடப்படுவார் என்பதை ஒன்றிய அரசு அமர்நாத்தை சான்றாக வைத்து பகீரங்கமாக மிரட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது!!
நாளை மதுரை விரகனூரில் @dmk_studentwing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிடவேண்டும்! ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி !
வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்!” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “கீழடியில் நகர நாகரீகத்தை ஆய்வு செய்து வெளிப்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி மண்மூடிப் புதைக்க முயலும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த இடம் மாற்றம் நடந்திருப்பது, மறைமுக மிரட்டலே.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது ஆய்வை முடிக்கும் முன்பே அவரை மாற்றியடித்தனர். உயர் நீதிமன்றம் வழிகாட்டிய பிறகுதான் அகழ்வாய்வு அறிக்கையை எழுத அவர் அனுமதிக்கப்பட்டார். இப்போது அதை பொதுவெளிக்கே வராமல் மறைக்க பார்க்கின்றனர். இப்போது அவரை மீண்டும் தில்லி யிலிருந்து நொய்டாவிற்கு மாற்றியுள்ளனர்.
இதுதான் பாஜகவின் வன்மம். வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யவோ, அறியவோ கூடாது என்ற செயல் திட்டத்தின் வெளிப்பாடு.
இந்த அராஜக போக்கை அனுமதிக்க முடியாது. கீழடி உள்ளிட்ட வரலாற்று ஆராய்ச்சிகளை காக்க, அறிவியல் அறிஞர்களை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.