இந்திரகுமார் திவாரி எக்ஸ் தளம்
இந்தியா

ம.பி. | ”எனக்கு மணப்பெண் கிடைக்கல..” மேடையில் ஓபனாக பேசிய ஆசிரியர் திடீர் மாயம்.. நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தில், தனக்கு மணப்பெண் கிடைக்காதது குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்திய நபர், காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்வார் (கிதோலா) கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. பகுதிநேர ஆசிரியராகவும் விவசாயியாகவும் பணிபுரிந்த 45 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதே மன உளைச்சலில் இருந்த இந்திரகுமார், கடந்த மே மாதம் சிஹோராவுக்கு அருகிலுள்ள ரிவன்ஜா கிராமத்தில் பிரபலமான குரு அனிருத்தாச்சாரியா மகாராஜ் நடத்திய ஆன்மீக சொற்பொழிவில் கலந்துகொண்டார். அப்போது தனக்கு மணப்பெண் கிடைக்காதது குறித்து தனது விரக்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திரகுமார் திவாரி

ஆனால், அங்கே அறிவுரை வழங்குவதற்குப் பதிலாக, அவரைப் பற்றி கிண்டலடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலாகி உள்ளது. இந்த நிலையில், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக அவரைக் காணவில்லை. அவரது காணாமல் போனது அவரது கிராமத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், உள்ளூர் காவல்துறையினரையும் பதில்களுக்காகத் திகைக்க வைத்துள்ளது.

குடும்பத்தினர் மற்றும் காவல்துறையின் ஆரம்ப விசாரணையின்படி, வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே ஓர் அடையாளம் தெரியாத குழு இந்திரகுமாரைத் தொடர்பு கொண்டுள்ளது. ’குஷி’ என்ற பெண்ணுடன் அவரது திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக அக்குழு உறுதியளித்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக நகைகள் மற்றும் பணத்தை கொண்டு வருமாறு கும்பல் அவரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி மாலை இந்திரகுமார் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஜூன் 6ஆம் தேதிக்குள் திரும்பி வருவதாக அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், எந்த தொடர்பும் இல்லை. மேலும் அவர் இருக்கும் இடமும் தெரியவில்லை.

போலீஸ்

இதையடுத்தே ஜூன் 8ஆம் தேதி உள்ளூர்வாசிகள் மஜ்ஹௌலி காவல் நிலையத்தில் அவர் காணாமல் போனதாக புகார் அளித்தனர். இந்திரகுமாரின் தனிமையான வாழ்க்கை மர்மத்தை மேலும் அதிகரிக்கிறது. அவருக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால் தேடுதல் பணி மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. இருப்பினும் கிராம மக்கள் விசாரணையில் காவல்துறையினருக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகின்றனர். இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு இந்திரகுமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.