delhi video
delhi video twitter
இந்தியா

காணாமல் போய் 22 வருடங்களுக்கு பின் துறவியாக வீடு திரும்பிய மகன்; கண்ணீர் வடித்த தாய்! வீடியோ

Prakash J

டெல்லியைச் சேர்ந்த ரதிபால் சிங் மற்றும் பானுமதி தம்பதியினரின் மகனான பிங்கு என்பவர், தன்னுடைய சிறுவயதில் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். அதாவது கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 11 வயதாக இருந்தபோது, தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடியுள்ளார். அப்போது அவருடைய தாய், கோபத்தில் பிங்குவைத் திட்டியுள்ளார். இதனால் வருத்தமுற்ற பிங்கு, வீட்டுக்குச் செல்லாமல் வேறு எங்கோ சென்றுவிட்டார். அன்று சென்ற அவர், கடந்த 22 ஆண்டுகளாக வீடே திரும்பவில்லை.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கராவுலி கிராமத்தில், பாரம்பரிய இசைக்கருவி ஒன்றை இசைத்தபடி நபர் ஒருவர் பாட்டு பாடியபடியே தெருவில் வந்துள்ளார். அவர், பார்ப்பதற்கு ஒரு துறவியைப்போல் வேடம் அணிந்து இருந்துள்ளார். எனினும், அவரை அந்த ஊர் மக்கள் உடனே அடையாளம் கண்டுகொண்டனர். ஆம், அவர் வேறு யாருமல்ல.. 22 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய பிங்கு என அடையாளம் கண்டனர்.

இதையும் படிக்க: ’தந்தை பெரியாருக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும்’ - நாடாளுமன்றத்தில் எம்பி திருமாவளவன் கோரிக்கை!

பின்னர், இத்தகவலை அப்பெற்றோருக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். அவர்களும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறுவனாக இருந்தபோது, உடலில் இருந்த தழும்பு ஒன்றைவைத்து தங்களுடைய மகனை பெற்றோர் அடையாளம் கண்டுகொண்டனர். பெற்ற மகனான பிங்குவைப் பார்த்ததும் தாய் பானுமதி கண்ணீர் வடித்துள்ளார். பின்னர், பெற்றோர் மற்றும் அந்தக் கிராமத்தினருடன் அமர்ந்து தாம் இசைக்கருவி மூலம் பாடல் ஒன்றை வாசித்துக் காட்டினார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய தாயிடம் யாசகம் கேட்கிறார்.

இதனை கண்டதும் கூடியிருந்த கிராமத்தினரும் சேர்ந்து கண்ணீர் வடிக்கின்றனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிங்குவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் அவரை, ஊரில் தங்கும்படி வற்புறுத்துகின்றனர். ஆனால், அவர் அதை மறுத்து அக்கிராமத்திலிருந்து வெளியேறினார். பிங்குவை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.11 லட்சம் தர வேண்டும் என அவர் சார்ந்த, மத அமைப்பு கேட்பதாக பிங்குவின் தந்தை குற்றச்சாட்டு வைத்துள்ளார். ’சட்டைப்பையில் ரூ.11கூட இல்லை. ரூ.11 லட்சம் பணத்திற்கு எங்கு செல்வேன்’ என அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: 3 ஆண்டுகளில் அசாம் முதல்வர், அமைச்சர்களின் சொந்த நிகழ்வுகளுக்கு மட்டும் விமானச்செலவு ’58.23 கோடி’!