moodys, adani x page
இந்தியா

அதானிக்கு மேலும் சிக்கல்! ரேட்டிங்கை மாற்றிய மூடீஸ் நிறுவனம்.. பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு!

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னணி சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான ’மூடிஸ்’ (Moody's) அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் மதிப்பீட்டை 'Stable' நிலையில் இருந்து 'Negative' ஆக மாற்றியுள்ளது.

Prakash J

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கௌதம் அதானி

அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்திய அரசியலிலும் அதானி புயல் வீசத் தொடங்கியுள்ளது. மேலும், அவருடய பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

அதானி குழும நிறுவனங்களை மாற்றிய மூடீஸ்

இந்த நிலையில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னணி சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான ’மூடிஸ்’ (Moody's) அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் மதிப்பீட்டை 'Stable' நிலையில் இருந்து 'Negative' ஆக மாற்றியுள்ளது. அதாவது, அதன் 7 நிறுவனங்களின் மதிப்பீட்டை நிலையானது என்பதில் இருந்து எதிர்மறை என மாற்றியுள்ளது. அந்த வகையில், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ) மற்றும் அதானி இன்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல் உள்ளிட்ட 7 நிறுவனங்களின் ரேட்டிங் குறைக்கப்பட்டு இருக்கிறது. மூடிஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனமும் அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் மதிப்பீட்டைல் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக அதானி குழுமத்தின் நிதி திரட்டும் திறன் மற்றும் ஒட்டுமொத்த நிதி நிலைமை பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவிலான நிர்வாக பிரச்னைகள் இருப்பதாகவும் மூடீஸ் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, மூடிஸ் நிறுவனம் மதிப்பீட்டை குறைத்ததை அடுத்து இன்று (நவ.26) இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 7% வரை கடும் சரிவைச் சந்தித்தன.

மூடீஸ் என்றால் என்ன?

உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தரநிர்ணய நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் மூடீஸ், எஸ்அன்ட்பி, பிட்ச் ஆகிய மூன்று நிறுவனங்கள் பிரபலமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த 3 நிறுவனங்களே உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு அளிக்கும் மதிப்பீடுதான் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அளிக்கும் தரத்தை வைத்தே பிற நபர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது முதலீடு செய்ய முன்வருவார்கள். இந்த நிறுவனங்கள் வழங்கும் தரத்தின் அடிப்படையிலேயே ஒருநாடு வெளிநாடுகளில் கடன் பெறுவதும் எளிதாகும். அதேநேரத்தில், தரம் மோசமாக இருந்தால் கடன் கிடைப்பதும் குறையும், கடனுக்கான வட்டியும் அரசுக்கு அதிகமாக இருக்கும். அதுவே தரம் உயர்வாக இருந்தால் எளிதாக ஓர் அரசால் கடன் பெறலாம், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.