Mohammed Shami, Jayant Chaudhary jayant_chaudharyrld/Insta
இந்தியா

உ.பியில் பாஜக கூட்டணி வேட்பாளர்? அரசியலில் நுழையும் முகமது ஷமி..? முக்கியப் புள்ளியுடன் சந்திப்பு!

வரும் தேர்தலில் ஷமியைக் களமிறக்கி ஆர்எல்டி அத்தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Prakash J

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சௌத்ரியை சந்தித்ததைத் தொடர்ந்து அரசியல் தொடர்பான பேச்சுகள் வேகமெடுத்துள்ளன.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய முகமது ஷமி, அதற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவே இல்லை. கடைசி சர்வதேச போட்டியை பொறுத்தவரை 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார். எனினும், உள்ளூர்ப் போட்டிகளில் அவர் தனது திறமையை நிரூபித்து வந்தாலும், இந்திய அணியில் இணைவது என்பது வெறும் கனவாகவே உள்ளது.

Mohammed Shami

இந்த நிலையில்தான், முகமது ஷமி, ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சௌத்ரியை டெல்லியில் சந்தித்துப் பேசியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

ஜெயந்த் சௌத்ரியை, முகமது ஷமி சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் அரசியலில் களமிறக்கப்படலாம் எனச் செய்திகளும் வெளியாகி வருகின்றன. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முகமது ஷமியோ அல்லது அவரது சகோதரர் ஹசீப்போ ஆர்எல்டி கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. முகமது ஷமி உ.பியின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

Mohammed Shami, Jayant Chaudhary

இந்த தொகுதி கணிசமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டது ஆகும். இத்தொகுதி, தற்போது சமாஜ்வாதி கட்சியின் வசம் உள்ளது. இந்த நிலையில்தான் வரும் தேர்தலில் ஷமியைக் களமிறக்கி ஆர்எல்டி அத்தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆர்எல்டி ஆளும் பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும், ஜெயந்த் சௌத்ரியுடனான சந்திப்பு குறித்து முகமது ஷமி தரப்பிலிருந்தோ அல்லது ஆர்எல்டி கட்சியிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.