மொபைல் டவர்
மொபைல் டவர் PT
இந்தியா

‘டவரை காணலை சார்’ - 8 மாதங்கள் கழித்து புகாரளித்த ஊழியர்; காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Jayashree A

திருடர்கள் மொபைல், பைக், நகை, பணம், வழிப்பறி இப்படி எத்தனையோ பொருட்கள் திருடிய செய்தியை கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால், மொபைல் டவரை திருடி கேள்விப்பட்டு இருக்கீங்களா?.... அதுவும் 50 மீட்டர் உயரமுள்ள 10 டன் எடை கொண்ட மொபைல் டவரை அலேக்காக தூக்கி அபேஸ் பண்ணி இருக்கின்றனர் சில பலே திருடர்கள். இந்த திருட்டு நடந்த இடம் பீகாரில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் இருக்கும் உஜ்ஜைனி என்ற கிராமத்தில்தான்.

கடந்த வாரம், கொசாம்பி மாவட்டத்தில் இருக்கும் சந்தீபன் காட் காவல் நிலைத்தை அணுகிய டெக்னீஷியன் ராஜேஷ்முமார் யாதவ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரின் புகாரின்படி அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான மொபைல் டவர் ஒன்று அக்கிராமத்தில் உள்ள உபித் உல்லா என்ற விவசாயியின் வயலில் நிறுவப்பட்டிருந்தது. தற்பொழுது அவ்விடத்தில் அக்கோபுரமானது காணாமல் போனதாகவும், அத்துடன் அதில் இருக்கும் மின் உபகரணங்கள் - மொபைல் டவர் அசெம்பிளியின் அனைத்து பகுதிகளும் காணவில்லை எனவும் கூறியுள்ளார் அவர். மேலும் காணாமல் போனவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 8.5 லட்சம் என்றும் புகார் அளித்துள்ளார்.

இவரின் புகாரை ஏற்ற காவல்துறையினர், அவர் கூறிய இடத்தில் சென்று விசாரித்ததில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உபித் உல்லா என்பவரின் வயலில் நிறுவப்பட்ட டவரானது மார்ச் மாதமே காணாமல் போன விவரம் தெரியவந்துள்ளது. திருட்டு நடந்து எட்டு மாதத்திற்கு பின் ஊழியர்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை அளித்தாலும், எப்படி டவரே காணாமல் போனது என்பது அதிர்ச்சிக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.