mizoram cm
mizoram cm twitter
இந்தியா

மிசோரம்: முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு!

Prakash J

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரமைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. எனினும் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில், புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று (டிச.7) தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வர் என்ற பெருமையை ரேவந்த் ரெட்டி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று (டிச. 8) பதவியேற்றார். கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மிசோரம் வாக்கு எண்ணிக்கையில், ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்தது. டிசம்பர் 5ஆம் தேதி ஜோரம் மக்கள் இயக்கத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக லால்துஹோமாவையும், துணைத் தலைவராக கே.சப்தங்காவையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, இன்று மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார்.

மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி, அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன், ஜோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், மிசோரம் தேசிய முன்னணி தலைவரும், முதல்வருமான ஜோரம்தங்கா மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவும் உடனிருந்தார்.

முன்னதாக, மிசோரமில் ஒரேகட்டமாக கடந்த நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27 தொகுதிகளைக் கைப்பற்றி ஜொரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சச்சின் to அதானி! கோலாகலமாக நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; 7000 விஐபிகளுக்கு அழைப்பு