வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் வருவது இயல்பான ஒன்று. ஆனால், இதன்மூலம் வரும் ரத்தக் கறையை வைத்து, பள்ளிக்கூடம் ஒன்றில் அனைத்து மாணவிகளையும் சோதனையிட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியொன்றில் மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி, அப்பள்ளியின் குளியலறையில் ரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளது. இது, பள்ளி நிர்வாகத்திற்குப் புகாராகச் செல்ல, மாணவிகள் யாராவது மாதவிடாய்க் காலத்தில் இருக்கிறார்களா என வினவப்பட்டுள்ளது. இதற்காக மாதவிடாய் இருப்பவர்கள் மற்றும் மாதவிடாய் இல்லாதவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, மாதவிடாய் இருப்பதாகக் கூறப்பட்ட மாணவிகளின் கைரேகையைப் பெற்ற பள்ளி நிர்வாகம், மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தியதுடன், மாதவிடாயுடன் இருக்கிறார்களா என்று சோதனையும் நடத்தியுள்ளனர். தவிர, மாதவிடாயுடன் இருப்பவர்களை அசிங்கமாகவும் திட்டியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த வெட்கக்கேடான செயலை, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததால், 9ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி முதல்வர், ஒரு பியூன், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு அறங்காவலர்கள் உட்பட ஆறு பேர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் மற்றும் பியூன் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நால்வர் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.