செய்தியாளர் - M.மீரா
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையான பதிலை அளித்துள்ளார். செப்டம்பர் 25 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்தப் பரபரப்பு சம்பவம் நடந்தது. இந்தியா மற்றும் லைபீரியா இணைந்து, கடல் வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்புக்காக உருவாக்கியுள்ள கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குழு (Group of Friends on Safety and Security of Shipping and Seafarers) குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம், சர்வதேச கடல் பாதுகாப்பு தொடர்பான புதிய குழுவை அறிமுகப்படுத்துவதாகும்.
வளைகுடா, செங்கடல் உள்ளிட்ட முக்கிய கடல் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதுடன், அப்பாவி கடற்படையினரின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
குறிப்பாக ஹார்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா, செங்கடல், ஏடன் வளைகுடா, பாப்-எல்-மண்டெப் மற்றும் கருங்கடல் போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரம் இந்தியாவுக்கு முக்கியமானதாகும். ஏனெனில், உலகின் பல்வேறு நாடுகளின் கப்பல்களில் ஏராளமான இந்தியர்கள் கடற்படையினராக பணியாற்றி வருகின்றனர். சமீபத்திய தாக்குதல்கள் இந்தியர்களையும் பாதித்துள்ளன. செப்டம்பர் 23 அன்று ஓமன் கடற்கரைக்கு அருகே MV Cape Dove என்ற சரக்கு கப்பல் தாக்கப்பட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. கப்பலில் இருந்த 20 இந்தியர்களில் 19 பேர் மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து கடல் வழித்தடங்களையும், அதில் பணியாற்றும் கடற்படையினரையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தியா–லைபீரியா தலைமையிலான புதிய Group of Friends, இதற்கான சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், ’பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை உங்கள் அரசாங்கம் எப்போது நிறுத்தும்’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஜெய்சங்கர், ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறதா? என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்ஷ் வர்தன், அந்த பத்திரிகையாளரிடம், உங்களுக்கான பதிலை நீங்கள் தெளிவாகக் கேட்டுவிட்டீர்கள் எனக் கூறினார்.
இந்த சம்பவத்துக்கு முந்தைய நாளும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா. தலைமையகத்துக்குள் சென்றபோது, இந்திய பத்திரிகையாளர் ஒருவர் “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?”என்று கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஷெரீப் பதிலளிக்கவில்லை. என்றும் கூறப்படுகிறது.