இந்திய விமானப் படையில் முக்கியப் பங்கு வகித்த மிக் 21 ரக விமானங்கள் ஓய்வு பெற உள்ளன.
இந்திய விமானப் படையில் முக்கியப் பங்கு வகித்த மிக் 21 ரக விமானங்கள் ஓய்வு பெற உள்ளன. 1965ஆம் ஆண்டு போர் தொடங்கி அண்மையில் சிந்தூர் ஆபரேஷன் வரை எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்தி நாட்டின் பாதுகாப்புக்கு முதுகெலும்பு போன்று விளங்கியவை மிக் 21 ரக விமானங்கள். விமானப் படையில் கடந்த 1963ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 1965ஆம் ஆண்டு, 1971ஆம் ஆண்டு, 1999ஆம் ஆண்டுகளில் நடந்த போர்களில் முக்கியப் பங்காற்றின. 2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல், இப்போதைய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலிலும் இவை ஈடுபடுத்தப்பட்டன. அதேநேரத்தில், மிக் 21 ரக போர் விமானங்கள் 400க்கும் மேற்பட்ட விபத்துகளைச் சந்தித்துள்ளன. இந்த விபத்துகளில் திறன் வாய்ந்த பைலட்கள் பலர் பலியாகி உள்ளனர். இதனால், பறக்கும் சவப்பெட்டி என்ற பொருளில் ஃப்ளையிங் காஃபின் என மிக் 21 ரக போர் விமானம் அழைக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் மிக் 21 ரக போர் விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தும் இந்தியா, பல்வேறு காலகட்டங்களில் இதனை மேம்படுத்தி உள்ளது. மிக் 21 ரக விமானம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டதாகும். இவ்விமானங்களுக்கு பிரியாவிடை தரும் நிகழ்வு சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர். மிக் 21 விமானங்களுக்கு பதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் பணியில் இணைய உள்ளன.