india, ai, microsoft
india, ai, microsoft twitter
இந்தியா

இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி? சீனா போடும் திட்டம்.. மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை!

Prakash J

இந்தியாவில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல், 7வது கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு தேர்தலைச் சிதைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் எச்சரித்துள்ளது. இது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

தைவானில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா வெள்ளோட்டம் பார்த்ததையும், அமெரிக்காவில் தற்போதைய தேர்தல் பிரசாரத்திலும் தாக்கம் ஏற்படுத்த இந்த சீன குழுக்கள் தொடர்ந்து முனைந்து வருவதையும் சுட்டிக்காட்டி மைக்ரோசாஃப்ட் நுண்ணறிவுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான அரசியல் விளம்பரங்கள், டீப் ஃபேக் ஆடியோக்கள், வீடியோக்கள் வாக்காளர்களை திசைதிருப்பும்” என்று மைக்ரோசாஃப்ட் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க: தொடரும் சோகம்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்.. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 10 பேர்!

இந்த செயற்கை நுண்ணறிவால் வேட்பாளர்களின் அறிக்கைகளும் பல்வேறு விவகாரங்களில் அவர்களின் நிலைப்பாடுகளும் மக்கள் மத்தியில் தவறாக பரப்பப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடும். ஆகவே அந்த செய்திகள் ஆய்வு செய்யப்படாமல், அனுமதிக்கப்பட்டால் வாக்காளர்கள் சரியான முடிவு எடுக்காமல் போவதற்கான சாத்தியம் உள்ளது.

மேலும், “சீன அரசு ஆதரவுகொண்ட சைபர் குழுமங்கள், வடகொரியாவின் உதவியோடு 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பல்வேறு தேர்தல்களையும் சிதைக்கத் திட்டமிட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கருத்துகளைப் பரப்பி பொதுமக்களின் எண்ண அலைகளை மாற்றலாம் என அவை திட்டமிடுகிறது” என மைக்ரோசாஃப்ட் நுண்ணறிவு குழு எச்சரித்துள்ளது. எனினும், இந்தியாவில் முன்னெச்சரிக்கையுடன் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, ஏஐ தொழில்நுட்பத்தை சமூக மேம்பாடு, பெண்களுக்கான வளர்ச்சி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி என இருவரும் ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தேர்வெழுத அனுமதி மறுப்பு... தனியார் பள்ளியின் அதிர்ச்சி செயல்!