உ.பி முகநூல்
இந்தியா

"எம் பொண்ணுக்கு தூக்கு தண்டனை கொடுங்க" கணவரை துண்டு துண்டாக வெட்டிய மனைவி..!

இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட முஸ்கானம், சாஹிலும் சவுரப்பைக் கொல்ல திட்டமிட்டனர். இதற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர மாதத்திலிருந்து சதித்திட்டத்தையும் தீட்டியுள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உபியில் மீரட் நகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு அருகில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோதுதான் திடுக்கிடும் சம்பவம் அங்கு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் சவுரப்

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். இவருக்கும் மீரட் இந்திரா நகரில் வசித்து வந்த முஸ்கான் என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணமும் நடக்க, பின்னர் அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறக்கிறது. இவர்களது திருமணத்தை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாத சூழலில், வீட்டைவிட்டு வெளியே வருகிறார் சவுரப். மேலும், மனைவியுடன் நேரத்தை செலவழிக்க தான் பார்த்துவந்த கப்பல் அதிகாரி வேலையையும் விட்டுள்ளார்.

இந்தநிலையில்தான், சவுரப்பின் நண்பரான சாஹில் மீது தனது மனைவி முஸ்கானுக்கு திருமணத்திற்கு பிறகான உறவு இருப்பதை அறிந்துகொண்ட சவுரப் , மனைவியை கண்டித்துள்ளார். இதனால் , இருவருக்கும் சண்டை முற்ற தனிவீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட சவுரப் மீண்டும் கடற்படையில் சேர முடிவு செய்து 2023 ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார். இந்தநிலையில்தான், பிப்ரவரி 24 அன்று, தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட முஸ்கானம், சாஹிலும் சவுரப்பைக் கொல்ல திட்டமிட்டனர். இதற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர மாதத்திலிருந்து சதித்திட்டத்தையும் தீட்டியுள்ளனர்.

திட்டம் தீட்டியது எப்படி?

பிப்ரவரி 22 அன்று, முஸ்கான் கோழியை வெட்டுவதற்கு என்று கூறி, கடையிலிருந்து ரூ.800க்கு இரண்டு மாமிசம் அறுக்கும் கத்திகளை வாங்கியுள்ளார். மேலும், மருத்துவரிடம் பதற்றமாக இருக்கிறது , தூக்கம் வரவில்லை என்று கூறி, தூக்க மாத்திரையையும் வாங்கியுள்ளார்.

மேலும், கொலை செய்தால் எங்கு சவுரப்பின் உடலை அடக்கம் செய்யலாம் என்று தேட ஆரம்பித்த முஸ்கான், பூஜையில் பயன்படுத்திய சில பொருட்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று தன் தோழிகளிடம் கூறி, உதவி கேட்டுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இப்படி நான்கு மாதங்கள் திட்டம் தீட்டியுள்ளார்.

இந்தநிலையில்தான், சவுரப்புக்கு கடந்த 4ம் தேதி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி கூர்மையான ஆயுதங்களால் சவுரப்பைக் கொடூரமான முறையில் கொன்றனர்.

பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரின் உடலை 15 துண்டுகளாக மனைவி வெட்டியுள்ளார். உடல் பாகங்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வீட்டில் இருந்த டிரம்மில் போட்டுள்ளனர். பின்னர் சிமெண்ட் கலவையை கொட்டி உடல் பாகங்களை டிரம்மில் போட்டு மூடியிருக்கிறார்கள்.

அடுத்த சில நாட்கள் கழித்து, அக்கம்பத்தினர் சவுரப் ராஜ்புத் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது முஸ்கான், ‘ எனது கணவர் மலை வாசஸ்தலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்’ என கூறியுள்ளார்.

இதுகுறித்து மீரட் கூடுதல் எஸ்பி ஆயுஷ் விக்ரம்சிங் தெரிவிக்கையில்,‘‘ சவுரப் மாயமானதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சவுரப் ராஜ்புத்தின் மனைவி முஸ்கானையும், அவரது காதலன் சாஹிலையும் பிடித்து விசாரித்தோம். தொடர் விசாரணையில் சவுரப் ராஜ்புத் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிமெண்ட் கலவையால் மூடப்பட்டிருந்த டிரம்மை உடைத்து உடல் பாகங்களை எடுத்தோம். முஸ்கான், அவரது கள்ளக்காதலன் சாஹில் கைது செய்யப்பட்டனர்’’ என்றார்.

குற்றவாளியின் பெற்றோர் சொல்வதென்ன?

மேலும், குற்றவாளி முஸ்கானின் பெற்றோர்கள் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "எங்கள் மகள்தான் மோசமானவர். அவள்தான் முதலில் அவனை அவன் குடும்பத்திலிருந்து பிரிக்க வைத்தாள். இப்போது இதைச் செய்துவிட்டாள். கண்மூடித்தனமாக நேசித்த சௌரப்புக்கு இதைச் செய்ததற்காக அவளுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். சவுரப்பின் குடும்பத்தோடு நாங்கள் துணைநிற்போம் . எனவே, அவளை தூக்கிலிட வேண்டும். அவள் வாழும் உரிமையை இழந்துவிட்டாள் ” என்று தெரிவித்துள்ளனர்.

சவுரப்பின் பெற்றோர் தெரிவிப்பது என்ன?

சவுரப்பின் பெற்றோர் தெரிவிக்கையில், ” முஸ்கானும் சாஹிலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். மேலும், இவர்களின் போதைப்பொருள் பழக்கத்தையும் சவுரப் நிறுத்திவிடுவார் என்று, அஞ்சியதாலும் இதனை அவர்கள் செய்துள்ளனர்.மேலும், சவுரப் லண்டனுக்கு சென்றபோது, முஸ்கான் 10 கிலோ எடை குறைந்துள்ளார். எங்களின் மகன் இல்லாததால் அவள் வருத்தப்பட்டு உடல் இழைத்துவிட்டால் என்று நினைத்தோம். ஆனால், போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று எங்களுக்கு தெரியாது.” என்று தெரிவித்துள்ளனர்.