மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய மறைவுக்கு அரசியல் மற்றும் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1. சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005 இயற்றப்பட்டு, 23 ஜூன் 2005 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
2. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2005இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது,
3. இந்தச் சட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) விதிகள் 2006 உடன் 10 பிப்ரவரி 2006 அன்று நடைமுறைக்கு வந்தது.
4. கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லாத் திட்டத்தைப் போக்குகிற வகையில், 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
5. வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக ‘இந்திரா காந்தி அவாஸ் யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
6. குழந்தைகளுக்கான இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது.
7. வங்கிகளில் கல்விக்கடன் என்பது எவரும் எளிதில் பெறமுடியாத, அரிதாக இருந்த காலத்தில், இவர் தலைமையிலான அரசு கல்விக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது.
8. விவசாயிகளின் அநீதியைத் துடைத்தெறியும் வகையில் இவரது ஆட்சியில் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தல் சட்டம் – 2013 கொண்டு வரப்பட்டது.
9. மன்மோகன் சிங்கின் ஆட்சியில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைவருக்கும் உணவுத் தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
10. மன்மோகன் சிங் ஆட்சியில் அமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தில், கிராமங்கள் அருகிலுள்ள நகரங்களோடு இணைக்கப்பட்டு, அந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.
11. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், புதிதாகப் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடை செய்யப்பட்டது.
12. ஜனனி சுரக்ஷா யோஜனா (JSS) என்கிற குழந்தைப்பேறு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
14. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்பட்டு, மகளிரும் குழந்தைகளும் பயனடைந்தனர்.
15. இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், தனித்தனி அடையாள எண் வழங்கும் வகையில் ஆதார் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதுதவிர, ஒருகாலத்தில் தொலைபேசி இணைப்பு பெறுவதற்குப் பலரும் காத்திருந்த நேரத்தில், தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியைக் கொண்டுவந்ததும் இவரது ஆட்சிதான்.