முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் pt web
இந்தியா

முடிவுக்கு வரும் 33 ஆண்டுகால அரசியல் பயணம்; இன்றுடன் ஓய்வு பெறுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

Angeshwar G

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்று நிறைவு பெறுகிறது. அவருடன் 54 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.

மன்மோகன் சிங் 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மன்மோகன் சிங்!

அதுவரை நிதியமைச்சர்களாக அரசியல்வாதிகளே செயல்பட்டுவந்த சூழலில், ராவ் தலைமையிலான அரசு, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநராக இருந்த மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சராக்கியது. மன்மோகன் சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் 15 ஆவது கவர்னராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்!

2004ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆண்டு வரை இந்தியாவின் 14 ஆவது பிரதமாராக இருந்தார். 2019 ஆம்ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரின் பதவிக்காலம் இன்றுடன் (ஏப்ரல் 03, 2024) முடிவடைகிறது.

மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பதவியேற்கிறார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.

90 வயதிலும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேறியது. இது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்துப் பேசி, அதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.

அப்போது 90 வயதான மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அவைக்கு வந்து மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் கூட்டத்தொடரில் பங்கேற்காது இருந்தபோதும், சக்கர நாற்காலியில் வந்து அவையின் வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தார்.

மல்லிகார்ஜூன கார்கே புகழாரம்!

மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவருக்கு கடிதமொன்று எழுதியுள்ளார். அதில், "நீங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், நமது நாட்டின் குடிமக்களுடன் தொடர்ந்து பேசி, அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் குரலாக தொடர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 3 தசாப்தங்களுக்கும் மேலாக தொடரும் உங்கள் ராஜ்யசபா பயணம் இன்று முடிவடைவதன் மூலம், ஒரு சகாத்பதமே நிறைவடைகிறது.

நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் நீங்கள் எப்போதும் ஒரு ஹீரோவாக இருப்பீர்கள். தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள். உங்கள் பொருளாதாரக் கொள்கைகளால் வறுமையில் இருந்து மீள முடிந்த ஏழைகள் அனைவருக்கும், அந்தச் சூழலை தந்து உதவிய benefactor-ஆக இருப்பீர்கள்" என்று புகழாரம் சூட்டியுள்ளார் கார்கே.