மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.
நேற்றுகூட காங்போக்பி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து, பழங்குடியின பகுதிகளில் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனப் போக்குவரத்தை முடக்கும் வகையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில், அங்கு பணியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் சில காவலர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தற்போதுவரை பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறைக்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். அதேநேரம், முதல்வா் பிரேன் சிங்கின் மன்னிப்பு போதுமானதல்ல என்று குறிப்பிட்ட காங்கிரஸ், பிரதமா் மோடி மணிப்பூருக்குச் சென்று, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தியது.
இந்த நிலையில், ”மணிப்பூா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக அமா்ந்து பேச வேண்டும்” என்று முதல்வா் பிரேன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மேலும் அவர், “மணிப்பூா் மக்களிடம் நான் மன்னிப்பு கோரியதை முன்வைத்து அரசியலில் ஈடுபடுவோருக்கு இங்கு அமைதி திரும்புவதில் விருப்பமில்லை. மணிப்பூரில் குழப்பம் நீடிக்க வேண்டுமென்பதே அவா்களின் எதிா்பாா்ப்பு. அவா்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது.
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம்தான் நான் மன்னிப்பு கோரியுள்ளேன். அனைவரும் ஒன்றாக அமா்ந்து பேசி, பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும். அமைதியை மீட்டெடுப்பதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”முதலமைச்சர் வருத்தம் தெரிவித்தாலும், மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது ஏன்? 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் மரணம் மற்றும் 60,000 இடம்பெயர்ந்துள்ள அழகிய எல்லை மாநிலத்தை கொதிநிலையில் வைத்திருக்க பிஜேபிக்கு சில சுயநலங்கள் உள்ளன என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் மீண்டும் கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.