manipur PTI
இந்தியா

மணிப்பூர் | தனி மாநிலம் கேட்கும் மலைப் பகுதியினர்.. பேச்சுவார்த்தையில் பின்னடைவு!

மணிப்பூரில் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் மலைப்பகுதிகளை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை குக்கி பழங்குடியினர் கைவிட மறுப்பதால், அந்த மாநிலத்தில் நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Prakash J

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.

manipur

கடந்த மார்ச் 8 அன்று குக்கி சமூகத்தினர் அதிகமாக வாழும் கங்போக்பி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து குக்கி சமூக மக்கள் அந்தப் பகுதியில் அரசு வாகனங்களை நுழையவிடாமல் தீவிர போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசு வாகனங்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர். மாநில அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை பெற்றுக்கொள்ள குக்கி சமூகத்தினர் ஏற்றுக்கொண்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், புதிய கங்போக்பியில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தனி மாநில கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதிக்க வாய்ப்பில்லை. அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கும் தீர்வுகளுக்கு குக்கி மக்களை சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.