u17 india football x page
இந்தியா

மணிப்பூர் | 2 ஆண்டு மோதல்.. மெய்தி - குக்கி இன வீரர்கள் இணைந்து ஈரானை வீழ்த்தி கால்பந்தில் வரலாறு!

மணிப்பூரில் 2 ஆண்டுகாலமாக குக்கி - மெய்தி இனப் பிரிவினர் மோதி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கு இந்தியாவின் U17 கால்பந்து அணி தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.

Prakash J

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் மெய்தி-குக்கி இன மோதலின் பின்னணியில், இரு சமூக வீரர்களும் இணைந்து இந்திய U17 கால்பந்து அணியை ஈரானை வீழ்த்தி ஆசியக் கோப்பைக்கு தகுதி பெறச் செய்துள்ளனர். இந்த வெற்றி, மாநில மக்களுக்கு பெருமையும், அமைதிக்கான நம்பிக்கையும் அளித்துள்ளது.

ஆசியக் கோப்பைக்கு தகுதிபெற்ற இந்தியாவின் U17 கால்பந்து அணி!

2026ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கு இந்தியாவின் U17 கால்பந்து அணி தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. கடந்த நவம்பர் 30ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி AFC U-17 ஆசியக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில், ஆசிய அணியான ஈரானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் 17 வயதுக்குட்பட்டோர் கால்பந்து அணி வரலாறு படைத்தது. இதன்மூலம் அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் வியப்பான செய்தி என்னவென்றால், ஈரானை திகைக்க வைத்த இரண்டு கோல்களும் மணிப்பூரின் போராடும் (மெய்தி - குக்கி) சமூகங்களைச் சேர்ந்த வீரர்களிடமிருந்து வந்தவை ஆகும். இதில் முதல் கோல் அடித்தவர் டல்லால்முவான் காங்டே பெனால்டி. இவர் குக்கி இனத்தைச் சேர்ந்தவர். 2வது கோலை அடித்தவர் ஃபார்வர்டு குன்லீபா வாங்கீரக்பம். இவர் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இருவருடைய பங்களிப்பினால்தான் இந்திய அணி வாகை சூடியிருக்கிறது; தவிர மணிப்பூருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. இரண்டரை ஆண்டு காலமாக இரு சமூகத்தின் மோதல் பிரச்னை தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த வந்த நிலையில், தற்போது விளையாட்டின் மூலமும் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. தவிர விளையாட்டு வீரர்களை, அம்மாநில மக்கள் பாராட்டி வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மெய்ட்டே ஹெரிடேஜ் சொசைட்டி வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணிக்கு வாழ்த்துகள். சுவாரஸ்யமாக, இந்தியாவிற்காக இரண்டு கோல்களை குகி மற்றும் மெய்தி (டி காங்டே மற்றும் ஜி வாங்கீரக்பம்) அடித்ததன் மூலம் சவூதி அரேபியாவில் நடைபெறும் AFC U17 ஆசியக் கோப்பை 2026க்கு தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டில் ஒன்றுபடுங்கள். விரைவில் நமது மணிப்பூர் மாநிலத்தில் அமைதி வரும் என்று நம்புவோம்" என அது தெரிவித்துள்ளாது. இரு சமூகத்தின் மோதல்களால், மணிப்பூர் பிளவுபட்டிருந்தாலும், மைதானத்தில் ஒருங்கிணைந்த முயற்சி வெற்றிக்கான நம்பிக்கையைத் தந்துள்ளது.

கால்பந்து வீரர்களை உருவாக்கும் மணிப்பூர்

நீண்டகாலமாக இந்திய கால்பந்தின் உற்பத்தி தொழிற்சாலையாக மணிப்பூர் இருந்துவருகிறது. கால்பந்தின் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்ட 23 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணியில் மணிப்பூரைச் சேர்ந்த 9 வீரர்கள் உள்ளனர். அதில் மொத்தம் 7 மெய்தி இன வீரர்களும் 2 குக்கி இன வீரர்களும் உள்ளனர்.

இரு சமூகங்களைச் சேர்ந்த வீரர்களும் ஆகஸ்ட் மாதம் முதல் கோவாவில் நடைபெறும் தேசிய முகாமில் இந்திய அணியில் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா AFC U-17 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மூன்றாவது முறையாகும். சவூதி அரேபியாவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தால், 2027ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் FIFA U-17 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கலாம்.

மணிப்பூரில் வெடித்த மோதல்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 351 நிவாரண முகாம்களில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வசிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.

Manipur violence

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 3,000க்கும் மேற்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்கப்படாமல் இருப்பதால் மணிப்பூரில் அமைதி இன்னும் வெகுதொலைவில் உள்ளது. இந்த நேரத்தில்தான் இரண்டு சமூக வீரர்கள் இணைந்து, 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் விளையாட களம் அமைத்துள்ளனர்.