மேனகா காந்தி எக்ஸ் தளம்
இந்தியா

தெருநாய்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற உத்தரவு.. விமர்சித்த மேனகா காந்தி!

விலங்குகள் நலன் என்றால், வரிந்து கட்டிக்கொண்டு வரும் மேனகா காந்தி, உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

PT WEB

வெறிநாய்க்கடி சம்பவங்கள், நாட்டையே ஒரு பேரிடர்போல மிரட்டி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மிக முக்கிய உத்தரவை பிறபித்தது. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திரியும் தெருநாய்கள் அத்தனையையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் பிரதிபலிக்கும் என்பது வெளிப்படை. வெறிநாய்க்கடி விவகாரத்தில், மத்திய நில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காத சமயத்தில், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை சாமானிய மக்கள் ஆர்வத்துடன் கவனிக்கலாயினர்.

வெறிநாய்

இத்தகு சூழலில்தான் நாட்டின் மேட்டுக்குடிகள் நாய்கள் மீதானஅக்கறை என்ற பெயரில், சாமானிய மக்கள் உயிரைப் புறந்தள்ளும் வகையில், உச்ச நீதிமன்றத்தை கண்டித்து பேசியுள்ளனர். விலங்குகள் நலன் என்றால், வரிந்து கட்டிக்கொண்டு வரும் மேனகா காந்தி, உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை உதிர்த்துள்ளார். "இது ஆத்திரத்தில் வழங்கப்பட்ட மிகவும் விசித்திரமான தீர்ப்பு. நாய்களுக்கு காப்பகம் அமைத்து, பராமரிப்பது என்றால், ரூ.15,000 கோடி செலவாகும். அவ்வளவு தொகை டெல்லி அரசிடம் உண்டா?" என்று மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா இருவருமே கடுமையாக இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளனர். “தெருநாய்களை குறுகிய காலத்துக்குள் காப்பகங்களுக்கு மாற்றுவது, அவற்றை மனிதாபிமானமற்ற முறையில் நடத்த வழிவகுக்கும். நாய்களை கொடுமைக்குஆளாக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.

ராகுல், பிரியங்கா

"தெருக்களிலிருந்து நாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது இரக்கமற்ற செயல்" என்று கூறியிருக்கிறார் ராகுல். நடிகை ரவீனா தாண்டன் போன்றோரும் நாய்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இது வெறிநாய்களின் சுதந்திரம் முக்கியமா, குடிமக்களின் உயிர் முக்கியமா என்ற விவாதத்தை கிளப்பியிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு தெருநாய்களுக்குத்தான், வளர்ப்பு நாய்களுக்கு அல்ல என்பது தெரிந்தும் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் மேட்டுக்குடி மனப்பான்மையுடன் கருத்து கூறியிருப்பதாக பொறுமுகிறார்கள் பொதுமக்கள்.

இந்தியா இன்று சந்திக்கும் தெருநாய் பிரச்சினைக்கு விலங்குகள் நலஆர்வலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியும் ஒருகாரணம் என்று கூறுபவர்கள், அந்த வரலாற்றை நினைவு கூர்கிறார்கள்.

மேனகா காந்தி

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு ஆபத்தான தெருநாய்களைக் கொல்ல முடிவு செய்தபோது, அதற்கெதிராக கடுமையாக எதிர்வினையாற்றினார் மேனகா. “இந்த முடிவு சட்டவிரோதமானது, அறிவியல் பூர்வமற்றது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார். People for Animals என்ற அமைப்பின் நிறுவனரான அவர், நாய்களைக் கொல்வது மேலும் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும், நாய்களை உணர்வுள்ள உயிரினங்களாகக் கருதி, கருத்தடை மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து போராடிவந்தார். தெருநாய்களைக் கொல்வதைச் சட்டப்பூர்வமாக தடுத்ததுடன், அவற்றைப் பிடித்து, கருத்தடை செய்து, மீண்டும் அதே இடத்தில் விடும் Animal Birth Control எனும் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தக் காரணமாகவும் இருந்தார் முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி. தன்னுடைய அதிகார பலத்தால் இதை அவர் சாதித்தார். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுக்கு எதிரான மேனகா காந்தியின் கருத்து அவரது வர்க்க பார்வையிலிருந்து அவர் கொஞ்சமும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் சாமானிய மக்கள்.