தெலுங்கானா
தெலுங்கானா முகநூல்
இந்தியா

பீனிக்ஸ் மனிதர்! இரவில் வாட்ச்மேன் பணி; பகலில் அயராத படிப்பு-ஒரே நேரத்தில் கிடைத்த இரண்டு அரசு வேலை!

ஜெனிட்டா ரோஸ்லின்

போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க உத்தியோகம் என்றாலே தனி குஷிதான்.. எப்படியாவது அரசாங்க வேலையை வாங்கிவிடவேண்டும் என்று கடின உழைப்பினால் அதனை சாத்தியமாக்கும் பலரையும் தற்காலத்தில் காண முடிகிறது.

அப்படிதான், தெலுங்கானாவில் இரவில் காவலாளியாக பணி புரிந்து கொண்டு, அதே சமயம் அரசாங்க போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுவந்த ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு அரசாங்க வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், மான்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கு வயது 31. வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர், கல்விக்கு எந்த பேதமும் இல்லை என்பதனை மெய்பிக்கும் வகையில், எம்.காம், பிஎட், எம்எட் படிப்புகளை படித்துள்ளார்.தந்தை கொத்தனார், தாய் பீடி சுற்றும் வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில், எப்படியாவது அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்ற பிரவீனுக்கு ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு நேர வாட்ச்மேனாக வேலை கிடைத்துள்ளது.

வாட்ச்மேன் வேலையில் சேர்ந்த இவர், இரவு நேரங்களில் காவல் காப்பதும், பகல் நேரங்களில் போட்டி தேர்வுகளுக்கு தன்னை தயாரிப்பதும் என்று கடினமாக உழைத்துள்ளார்.இரவில் பணிக்கு மத்தியிலும் ,பகலில் தூக்கத்தினையும் தொலைத்த பிரவீனின் விடாமுயற்சியின் விளைவாக ஒரே நேரத்தில் முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை விரிவிரையாளர் என 2 அரசாங்க வேலைகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பெரும் அதிர்ச்சியடைந்த பிரவீன், இளநிலை விரிவுரையாளர் பணியை தேர்வு செய்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. காவாலாளியாக பணிப்புரியும்போது மாதம் ரூ.9000 மட்டுமே வாங்கிய பிரவீனுக்கு தற்போது ரூ.73000 - 83,000 வரை சம்பளம் .

திறமைக்கு தகுதி தேவையில்லை என்பதை மெய்பித்து காட்டிய பிரவீன் இது குறித்து தெரிவிக்கையில், ”உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள மல்டிமீடியா ஆராய்ச்சி மையத்தில் இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்தேன்,ஆகவே காலையில் படிக்க அதிக நேரம் கிடைத்தது. போட்டி தேர்வில் மட்டுமே என் கவனம் இருந்தது. நான் 2 தேர்வுகளில் வெற்றி பெறுவேன் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.படிப்பதற்கு ஒரு அறை,புத்தகங்கள், படிப்பு செலவிற்கு பணம் இருந்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏழ்மை என்று காரணம் காட்டி தன் வாழ்க்கையை முடித்து விடாமல் தன் சந்ததியையே ஒரு படி முன்னேற்றியுள்ளார் பிரவீன். இந்நிலையில், இந்த சம்பவம் பலரிடையே பெரும் பாராட்டினை பெற்றுவருகிறது.