குஜராத்திலிருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விபத்தில், தற்போது வரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் மோதியதால் அங்கிருந்தவர்களில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டாலும் ஒரு சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போதைய தகவல்படி, இந்த விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் 11a என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பதாக நகர காவல் துறை தெரிவித்துள்ளது. உயிர் தப்பிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அவர், தனது சகோதரருடன் பயணம் செய்ததாகவும், குடும்பத்தினரைப் பார்க்க இந்தியா வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனிமும், இந்த விபத்தில் அவரது சகோதரர் தொடர்பாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக உயிர்பிழைத்த விஸ்வாஸ் குமார், "எனக்குச் சுயநினைவு திரும்பியபோது, என்னைச் சுற்றி பல உடல்கள் கிடந்தன. நான் பயந்துவிட்டேன். பின்னர், நான் எழுந்து ஓடினேன். விமானத்தின் பாகங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. அப்போது, யாரோ ஒருவர் என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமித் ஷா ஆய்வு நடத்தி, ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். மேலும், விமான விபத்தி காயமடைந்தோரின் முழுச் சிகிச்சை செலவையும் தாமே ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. இந்த ஜன்னல் இருக்கை விமானத்தின் வலது பக்கத்தில் உள்ளது. மேலும், விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக உள்ளது. நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த 11ஏ இருக்கை அமைந்துள்ளது.
எப்படி தப்பித்தார் ?
விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத இவர்.. விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார்.