விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம்
குஜராத்திலிருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விபத்தில், தற்போது வரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் மோதியதால் அங்கிருந்தவர்களும் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், இந்த விமான விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விமானத்தில் பயணித்த முன்னாள் முதல்வர்
இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ராம்னிக்லால் ரூபானியும் பயணித்தார். ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ள செய்தியின்படி, விஜய் ரூபானி, இருக்கைப் பட்டியலில் 12வது பயணி இருந்துள்ளார். மேலும் அவர் வணிக வகுப்பு பிரிவின்கீழ் வரும் Z வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து இவரும், இந்த விமான விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் மத்திய அரசோ, மாநில அரசோ தெரிவிக்கவில்லை. மறுபுறம், விஜய் ரூபானியின் ராஜ்கோட் வீட்டிற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் பதற்றமான சூழலைக் காட்டியது. கவலையுடனும் கண்ணீருடனும் அவர்களை நிற்பதை வீடியோக்கள் காட்டின.
அண்டை வீட்டார் சொன்ன தகவல்!
எனினும் இதுகுறித்து கிரண் என்ற பெண்மணி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அந்த விமானத்தில் விஜய் ரூபானி இருந்ததாகவும் எனக்கு செய்தி வந்துள்ளது. ஆனால் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும், நாங்கள் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். நாங்கள் அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கிறோம். 1988 முதல் நாங்கள் அண்டை வீட்டாராக இருக்கிறோம். நாங்கள் ஒரு குடும்பம்போல இருக்கிறோம். என் கணவர் அவர்களின் குடும்ப மருத்துவர். அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இது நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் விஜய் ரூபாய் விமான விபத்தில் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த விஜய் ராம்னிக்லால் ரூபானி?
1956ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2ஆம் தேதி, ரங்கூனில் (தற்போது யாங்கோன், மியான்மர்) பிறந்த இவர், ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத்தின் 16வது முதலமைச்சராக பதவி வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முக்கிய தலைவராகவும் அவர் இருந்துள்ளார். இதற்கு முன்பு அவர், ராஜ்கோட் மேயராகவும் (1996–1997), மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் (2006–2012) இருந்துள்ளார். மேலும் குஜராத் மாநில அரசில் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர் வழங்கல் போன்ற துறைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.